ஜூன் 4ம் தேதிக்கு பிறகு உத்தரப்பிரதேச மாநிலத்தை மாஃபியாக்கள் இல்லாத மாநிலமாக அறிவிக்க இருப்பதாக முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
ஜூன் 4-ம் தேதிக்குப் பிறகு மாஃபியா இல்லாத மாநிலமாக உத்தரப் பிரதேசம் மாறும் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். இது மாநில அரசின் மாஃபியா எதிர்ப்பு முயற்சிகளை எடுத்துக்காட்டுகிறது. லக்னோவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய ஆதித்யநாத், உத்தரப் பிரதேசத்தை ‘மாஃபியா இல்லாத’ மாநிலமாக அறிவிக்க ஒரு குறிப்பிட்ட காலக்கெடு அமைக்கப்படும் ஜூன் 4-ஆம் தேதி தீர்க்கமான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தார்.
அவர் கூறுகையில், “மாஃபியாக்களின் சட்டவிரோத நிலங்களில் மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகள் கட்டப்படும். முதற்கட்டமாக மாஃபியாக்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், இரண்டாவது கட்டமாக அவர்களது சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும். இதற்கான எங்கள் செயல் திட்டமும் தயாராக உள்ளது” என்று உ.பி முதல்வர் வலியுறுத்தினார்.
மாநிலத்தில் அமைதியை கெடுக்க முயல்பவர்கள் அதற்கான தண்டனையை 7 ஜென்மங்களுக்கும் பெற வேண்டி இருக்கும். சமாஜ்வாடி கட்சியின் தலைவர்களில் ஒருவரான ஆசம் கான் மட்டுமல்ல, எந்த மாஃபியா தலைவரும் என்ன விதைக்கிறாரோ அதையே அறுவடை செய்ய வேண்டி இருக்கும். மகாபாரதத்தில் திரௌபதி துயிலுரியப்பட்டபோது, துரியோதனன், துச்சாதனன் முன்னிலையில் அனைவரும் அமைதியாக இருந்தனர். அதற்கான பலனையும் அனுபவித்தனர்.
அதேபோன்று தான் தற்போது உத்தரப் பிரதேசத்திலும் நடக்க இருக்கிறது. மக்களுக்கு எதிரானவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மாஃபியாக்களிடமிருந்து பறிமுதல் செய்யப்படும் நிலத்தில், மருத்துவமனைகள், பள்ளிகள் ஆகியவை கட்டப்படும். அவர்களிடமிருந்து கைப்பற்றப்படும் சொத்துக்கள் மூலமாக அடித்தட்டு மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் செய்து தரப்படும்” என்று தெரிவித்துள்ளார்.