இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையிலான மோதல், கச்சா எண்ணெய் விலையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அஞ்சப்படுகிறது.
ஹமாஸ் படைகள் இஸ்ரேல் மீது அதிரடியான ஏவுகணை தாக்குதலை முன்னெடுத்த நிலையில், இஸ்ரேலுக்கு இந்திய பிரதமர் மோடி உடனடியாக தனது ஆதரவை வெளிப்படுத்தியிருந்தார். ஆனால், பின்னர் இந்திய வெளிவிவகார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாலஸ்தீனத்தில் அமைதி திரும்ப வேண்டும் எனவும், அங்குள்ள மக்களுக்கு எப்போதும் ஆதரவு உண்டு எனவும் குறிப்பிட்டுள்ளதுடன், ஹமாஸ் படைகளின் கொடூர தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்திருந்தது.
இரு நாடுகளுக்கும் இடையேயான போர் நீடிக்கும் என்றால், இந்தியப் பொருளாதாரத்திற்கு பெரும் அடியாக இருக்கும் என்றே அஞ்சப்படுகிறது. ஹமாஸ் படைகளுக்கு பதிலடி அளிக்கும் வகையில், காஸா மீது இஸ்ரேல் கடுமையான தாக்குதலை முன்னெடுத்து வந்தாலும் நாட்டின் பொருளாதாரம் அதனால் பாதிக்கப்படுவதாகவும், வர்த்தகம் மற்றும் வணிக செயல்பாடுகள் மொத்தமாக முடங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு குறித்த கவலைகள் மீண்டும் எழுந்துள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மேலும், உலகளாவிய பெட்ரோலிய சந்தையில் நிச்சயமற்ற நிலைகள் உருவாகியுள்ளதாகவும், இதனால் விலைகள் விரைவில் உயரும் வாய்ப்புகள் அதிகம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே, IMF முதல் துணை நிர்வாக இயக்குனர் கீதா கோபிநாத் தெரிவிக்கையில், இஸ்ரேல் – ஹமாஸ் போர் அடுத்த கட்டத்திற்கு நகரும் என்றால், அது உலகெங்கிலும் எண்ணெய் விலைகளிலும், பணவீக்கம் மற்றும் உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றார். கச்சா எண்ணெய் விலை ஏற்கனவே ஏறுமுகத்தில் உள்ளது. இந்நிலையில், வர்த்தகர்கள் எவரும் அடுத்த சில தினங்களுக்கு எண்ணெய் நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்வதை தவிர்க்க வேண்டும் எனவும் நிபுணர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இஸ்ரேல் – பாலஸ்தீன விவகாரம் மிக விரைவில் தீர்க்கப்படாவிட்டால் பெட்ரோல் விலையில் 10 சதவீதம் வரையில் உயரும் வாய்ப்புகள் இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவை பொருத்தமட்டில் எண்ணெய் விலை உயர்வு மற்றும் இஸ்ரேலில் இருந்து பொருட்கள் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி மீதான தற்காலிக பாதிப்பு இந்திய பொருளாதாரத்தில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும். அத்துடன் நாட்டில் அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயரும் என கீதா கோபிநாத் குறிப்பிட்டுள்ளார்.