புதுச்சேரி மாநில அரசின் குரூப் சி பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கு மட்டும் வயது வரம்பை இரண்டு ஆண்டுகள் தளர்வு செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் லட்சக்கணக்கில் இளைஞர்கள் படித்துவிட்டு, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கின்றனர். ஆனால், கடந்த 16 ஆண்டுகளாகவே புதுச்சேரி மாநிலத்தில் சொல்லிக்கொள்ளும்படி வேலை நியமனம் இல்லை. அப்படியே வேலை நியமன அறிவிப்பு வெளியானாலும், பல ஆண்டுகள் ஜவ்வாக இழுத்து எழுத்து தேர்வையும், உடற்தகுதி தேர்வையும் நடத்தும் நிலையே உள்ளது. போலீசாருக்கான உடற்தகுதி தேர்விலும் இதுதான் நடந்தது. இதுபோன்ற சூழ்நிலையில், தற்போது 10 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப புதுச்சேரி அரசு முனைப்பு காட்டி வருகிறது.

இதனால், அரசு பணிக்கு விண்ணப்பிக்க வயது வரம்பில் தளர்வு காட்ட வேண்டும் என பட்டதாரிகள் வலியுறுத்தி வந்தனர். அதனைத் தொடர்ந்து, முதல்வர் ரங்கசாமியின் உத்தரவின்பேரில் வயது முதிர்ந்த பட்டதாரிகள் அரசு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் வகையில், குரூப் சி பணியிடங்களுக்கு மட்டும் வயது வரம்பில் இரண்டு ஆண்டுகள் தளர்வு வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த வயது தளர்வு ஒவ்வொரு பதவியிலும் முதல் நேரடி நியமனம் அல்லது 2023 – 2024 நிதியாண்டு மார்ச் வரை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று அரசு துறைகளுக்கு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வயது தளர்வு ஒருமுறை மட்டுமே என்றும், இதுதொடர்பாக பணி நியமனத்தின் போது அறிவிப்பு வெளியிட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாநிலத்தில், குரூப் சி பதவியை பொறுத்தவரை 20,526 அரசு ஊழியர்கள் பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. எல்.டி.சி., யு.டி.சி., பல்நோக்கு ஊழியர் உள்ளிட்ட பதவிகள் குரூப் சி பதவியை சேர்ந்தவை. இந்த பதவிகளை மாநில அரசே நேரடியாக நிரப்ப அதிகாரம் உள்ளதால், வயது தளர்வு விஷயத்தில் முக்கிய முடிவை மாநில அரசு எடுத்துள்ளது. குரூப் சி பணிகளுக்கு விண்ணப்பிக்க ஒரே மாதிரியான வயது நிர்ணயம் இல்லை. பணியிடங்களுக்கு ஏற்ப விண்ணப்பிக்கும் வயதும் மாறுகிறது. எல்.டி.சி.,க்கு பொது பிரிவில் விண்ணப்பிக்க 30 வயது என உள்ளது. அதே நேரத்தில், யு.டி.சி. பணி நியமனத்திற்கு பொதுப்பிரிவுக்கு 32 வயதாக உள்ளது. எனவே, குரூப் சி பதவிக்கு நியமன விதிகளில் உள்ள வயதில் இருந்து 2 ஆண்டுகள் கடந்தவர்களும் இனி விண்ணப்பிக்கலாம்.