நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் மாவோரி பழங்குடியின இனத்தை சேர்ந்த இளம்பெண் எம்.பி., பாரம்பரிய ஹக்கா நடனமாடி ஆவேசத்தை வெளிப்படுத்திய வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.
நியூசிலாந்தில் அண்மையில் நடந்த தேர்தலில் மாவோரி பழங்குடியின இனத்தை சேர்ந்த 21 வயதே ஆன ஹனா ரவ்ஹிதி மைபி கிளார்க் என்ற இளம்பெண் எம்.பி.யாக தேர்வானார். அதாவது, நியூசிலாந்து நாடாளுமன்ற வரலாற்றில் 170 ஆண்டுகளுக்கு பிறகு மாவோரி பழங்குடியினத்தில் இளம்பெண் எம்.பி.யாக தேர்வாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அரசியல்வாதியாக மட்டுமின்றி மாவோரி மொழி, அம்மக்களின் நிலம், பாரம்பரியத்தை காக்கும் பணியிலும் தீவிரமாகவே தன்னை ஈடுபடுத்தி கொண்ட இளம்பெண் எம்.பி., நாடாளுமன்றத்தில் முதன்முறையாக பேசியதே உலக முழுவதும் கவனத்தை ஈர்த்தது.
அதாவது நாடாளுமன்றத்தில் பேசுவதற்கு அழைக்கப்பட்டவுடன் தங்களது மாவோரி இனத்தின் பாரம்பரிய பாடலை பாடி பேச்சை தொடங்கினார். அப்போது பாரம்பரியமான மாவோரி ஹக்கா நடனத்தையும் அவர் ஆவேசமாக அரங்கேற்றியது நாடாளுமன்றத்தையே அதிர வைத்தது. ஆவேசத்துடன் பேசியது மட்டுமின்றி தான் சார்ந்த பழங்குடியின மக்களின் உரிமையை பாதுகாப்பதற்காக உயிரையும் இழக்கவும் தயார் என்று உருக்கமாகவும் பேசியுள்ளார் ஹனா. நியூசிலாந்து இளம்பெண் எம்.பி.யின் ஆவேசம் மற்றும் உருக்கமான பேச்சு சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. சுமார் 3 கோடிக்கும் அதிகமான பார்வைகளை பெற்றிருக்கும் ஹனா எம்.பி.யின் பேச்சு உலகம் முழுவதும் கவனத்தையும் ஈர்த்துள்ளது. நாடாளுமன்றத்தில் தனது செயல்பாடு திட்டமிட்ட ஒன்று அல்ல என்று விளக்கம் அளித்திருக்கும் ஹனா, அவையில் இருந்த சூழ்நிலை மற்றும் அங்கிருந்த தன் இன மக்கள் அளித்த உற்சாகத்தால் அவ்வாறு நடந்து கொண்டதாக தெரிவித்தார்.