கோவையில் ரேபிஸ் நோயால் ஒருவர் தன்னைத் தானே தாக்கிக் கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ராமசந்திரன் (வயது 28) என்பவர், கோவையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். இவரை, சில நாட்களுக்கு முன்பு தெருநாய் கடித்துள்ளது. இதையடுத்து, உடல்நலம் பாதிக்கப்பட்டு செவ்வாய்க்கிழமை கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால், அவரின் உடல்நிலை மோசமானது. யாராலும் கட்டுப்படுத்த முடியாதளவுக்கு செயல்பட தொடங்கினார்.
“மூச்சு விட சிரமமாக இருக்கிறது” என்று மட்டும் கூறி வந்துள்ளார். பின்னர், திடீரென வார்டில் இருந்த ஜன்னல் கண்ணாடியை உடைத்து, அந்த துண்டுகளை எடுத்து தன்னைத் தானே கழுத்தை அறுத்துக் கொண்டார். பின்னர், அவருக்கு சிகிச்சை அளித்தபோதும், அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மருத்துவர் நிர்மலா கூறுகையில், “அந்த நபர், ரேபிஸ் அறிகுறியுடன் வந்தார். இதனால், அவருக்கு தனி வார்டில் சிகிச்சை அளித்து வந்தோம். ஆனால், அவருக்கு ரேபிஸ் நோயின் தாக்கம் தீவிரமடைந்ததால், மிகவும் ஆக்ரோஷமாக நடந்து கொண்டார். வார்டில் இருந்த ஜன்னல் கண்ணாடியை உடைத்து தனது கழுத்து மற்றும் உடல் பாகங்களை கடுமையாக தாக்கிக் கொண்டார். அவரின் அருகில் கூட செல்ல முடியவில்லை. இதனால், தீயணைப்புத்துறைக்கு தகவல் அளித்தோம். அவர்கள் உடனே விரைந்து வந்து அவரை மீட்டனர். பின்னர் அவருக்கு சிகிச்சை அளித்தோம். ஆனால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கோவையில் ரேபிஸ் நோயால் ஒருவர் தன்னைத் தானே தாக்கிக் கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.