இந்திய ராணுவத்தில் அக்னிவீர் ஆட்சேர்ப்புக்கான விண்ணப்பிக்க அவகாசம் நாளை முடிகிறது. எனவே, தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து ஆன்லைனில் விண்ணப்பிங்கள் வரவேற்கப்படுகிறது. இது குறித்து, கோவை ராணுவ ஆட்சேர்ப்பு அலுவலர் கர்னல் அன்சூல் வர்மா வெளியிட்டுள்ள அறிவிப்பில், “அக்னிவீர் ஆட்சேர்ப்பில் கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், நாமக்கல், நீலகிரி, மதுரை, தேனி, கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 25ஆம் தேதி வரை www.joinindianarmy.nic.in என்ற லிங்கை கிளிக் செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். அக்னிவீர் பொதுப்பணியாளர், தொழில்நுட்பம், எழுத்தர், கிடங்கு மேலாளர், தொழிலாளி (10ஆம் வகுப்பு தேர்ச்சி), அக்னிவீர் தொழிலாளி (8ஆம் வகுப்பு தேர்ச்சி) ஆகிய பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். இதில் இரண்டு பிரிவுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
1.6 கி.மீ ஓட்டப் பரிசோதனைக்கான நேரம் 5 நிமிடம் 45 விநாடிகளில் இருந்து 6 நிமிடம் 15 விநாடிகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது. என்சிசி, ஐடிஐ, டிப்ளோமா முடித்தவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்படும் என்றும் நுழைவுத்தேர்வு தமிழ் உட்பட 13 மொழிகளில் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு தேதிகள் விரைவில் வெளியிடப்படும். இந்த ஆட்சேர்ப்பு முறையே முற்றிலும் வெளிப்படையானது. மோசடி செய்யும் ஏஜென்ட்டுகளிடம் ஏமாற வேண்டாம்” என்று தெரிவித்துள்ளார்.