காஞ்சிபுரம் அருகே அதிவேகமாக பைக்கில் வந்து வீலிங்க் அடித்து விபத்தில் சிக்கிய வழக்கில், யூடியூபர் டிடிஎஃப் வாசன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர், இடுப்பு வலி ஏற்பட்டதாக நள்ளிரவில் கதறி இருக்கிறார்.
யூடியூபர் டிடிஎஃப் வாசன். இது 2கே கிட்ஸ்கள் ரசிக்கும் பெயர். ஆனால், டிடிஎப் வாசன் போன்ற சமூகத்தின் மோசமான முன்னுதாரணங்களை எப்படி போலீசார் இன்னமும் வெளியில் சுற்ற அனுமதிக்கின்றனர்? என்பது நெருப்பை வயிற்றில் கட்டிக் கொண்டிருக்கும் பெற்றோர் குமுறல். பைக்கில் சட்டவிரோதமாக அதிவேகமாக சென்று சாகசங்களில் ஈடுபடுவது, அதை வீடியோ எடுத்து யூடியூப்பில் வெளியிட்டு பணம் சம்பாதிப்பதுதான் டிடிஎப் வாசன்.
இந்த சாகசனங்களில் மயங்கிப் போனவர்கள் தான் 2கே கிட்ஸ். இப்படி அதிவேகமாக பைக் ஓட்டி அடிக்கடி சர்ச்சையில் சிக்கி கொள்ளும் டிடிஎப் வாசனின் லைசென்ஸ் உரிமத்தை ஏன் போலீசார் முடக்கி வைக்காமல் நடமாட விடுகின்றனர் என்பது கேள்வி. இந்நிலையில், பெங்களூர் செல்லும் வழியில் காஞ்சிபுரம் அருகே பைக்கில் வீலிங் சாகசம செய்ய முயன்று பல அடி தூரத்துக்கு தூக்கி வீசப்பட்டார் வாசன். இதில் படுகாயமடைந்து கை கட்டுடன் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஆனால், புழல் சிறையில் நேற்று நள்ளிரவு எனக்கு முதுகு வலிக்கிறது. இடுப்பு வலிக்கிறது என முறையிட்டுள்ளார். இதையடுத்து, இரவோடு இரவாக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு டிடிஎப் வாசன் அழைத்து வரப்பட்டார். மருத்துவமனையில் உடல்நலன் பாதிக்கப்படவரைப் போலவே டிடிஎப் வாசன் நடந்து கொள்ளவில்லை. மீடியா கேமராவை பார்த்த உடன் எந்த வித குற்ற உணர்ச்சியுமே இல்லாமல் சிரித்த படி போஸ் கொடுத்தார். இதன் உச்சமாக, கையில் கட்டுடன் வலம் வந்த டிடிஎப் வாசன், கை கட்டு இல்லாமல் ஜாலியாக போலீசாரை பின் தொடர்ந்து செல்லும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளது. டிடிஎப் வாசன், சிறை தண்டனையை அனுபவிக்க பயந்து நாடகமாடுவதாகவே சந்தேகிக்கப்படுவதாக தெரிகிறது.