சேலம் மாநகர போக்குவரத்து காவலரை இளைஞர் ஒருவர் தாக்கியதில் படுகாயம் அடைந்து ரத்தம் சொட்ட சொட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சேலம் மாநகர போக்குவரத்து காவலராக பாண்டியன் (42) என்பவர் பணியாற்றி வருகின்றார். வழக்கம் போல பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள காந்தி சிலை முன்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவ்வழியாக இளைஞர் ஒருவர் செல்போனில் பேசிக் கொண்டே இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். அவரை தடுத்து நிறுத்தியுள்ளார். செல்போனில் பேசிக் கொண்டே வண்டியை ஓட்டலாமா என கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
ஆத்திரமடைந்த அந்த இளைஞர் போக்குவரத்து காவலர் பாண்டியனை சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதில் முகத்தில் , மூக்கில் ரத்தம் சொட்ட சொட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். விசாரணையில் அந்த நபரின் பெயர் கோகுல்ராஜன் என்பதும் அவர் அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பன்னீர் செல்வத்தின் தம்பி மகன் என்பதும் தெரியவந்தது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள காவலர் பாண்டியனை, மாநகர காவல் ஆணையாளர் நஜ்முல் ஹோதா நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.