அதிமுகவில் இணைய நான் யார் வீட்டு வாசலிலும் நிற்கவில்லை என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”ராஜன் செல்லப்பா, எனக்காக சிபாரிசு செய்வதாக கூறியிருக்கிறார். எனக்காக யாரும் பேசத் தேவையில்லை. யாரிடமும் எங்களை அழைத்துக் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்று சொன்னதில்லை. அதிமுகவில் இணைவதற்காக நான் யார் வீட்டு வாசலிலும் நிற்கவில்லை.
இரட்டை இலையை எதிர்த்து நான் போட்டியிடும் சூழல் எப்படி வந்தது என்பது அனைவருக்கும் தெரியும். என்னுடைய தொண்டர் பலத்தை நிரூபிக்கவே நான் நிற்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. என்னை தோற்கடிக்க 6 பன்னீர்செல்வத்தை தேடி கண்டுபிடித்து நிறுத்தினார். ஆனால், இரட்டை இலையும் இவர் கொண்டு வந்து நிறுத்தியவர்களும் டெபாசிட்டை இழந்தனர்.
அதற்கு முழு காரணகர்த்தா உதயகுமார் தான். இனிமேல் எங்களைப்பற்றி பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். ஒற்றை தலைமை வந்தால் எடப்பாடி பழனிசாமி தலைமையில் முழு வெற்றியை பெறுவோம் என்றனர். ஆனால், அவர் வந்த பிறகு நடைபெற்ற 11 தேர்தலிலும் தோல்வியை சந்தித்துள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து சென்னையில் பேசிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், “ஒற்றைத் தலைமை வந்தும் தேர்தலை சந்திக்க திறனற்ற கட்சியாக தான் அதிமுக உள்ளது. அதிமுக இணைய வேண்டும் என்று ஆரம்பம் முதலே பாஜக தலைமை கூறி வருகிறது. கோவைக்கு வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை வாய்ப்பு இருந்தால் சந்திப்போம்” என தெரிவித்துள்ளார்.