அதிமுக தலைமை அலுவலகத்திற்குள் தொண்டர்கள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்திற்குள் தொண்டர்கள் ஜூலை 20ஆம் தேதி வரை ஒரு மாதத்திற்கு நுழைய அனுமதி இல்லை என்று நீதிமன்றம் அறிவித்திருந்தது. அது நேற்றுடன் முடிவடைந்த நிலையில், இன்று அதிமுக தலைமை அலுவலகத்திற்கு தொண்டர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், இன்னும் தொண்டர்கள் வர வேண்டாம் என்ற அறிவிப்பு பலகை அகற்றப்படாமல் உள்ளது.
இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவருமே தங்களது சொந்த ஊர்களில் இருக்கும் நிலையில் அதிமுக தலைமை கழகம் சார்பில் திடீர் உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற தாக்குதலில் சேதம் அடைந்த பொருட்கள் அப்படியே கிடக்கின்றன. கட்சியினர் உள்ளே நுழைந்தால் இது தொடர்பான ஆதாரங்கள் காணாமல் போக வாய்ப்பு ஏற்படும். எனவே கட்சியினர் யாரும் தலைமை கழகத்துக்கு வரவேண்டாம் என்று வாய்மொழி உத்தரவாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால், தலைமை கழகத்துக்குள் நுழைவதற்கான கோர்ட்டு தடை விலகிய பிறகும் தொண்டர்களால் உள்ளே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இருப்பினும் அதிமுகவினரோ அல்லது சமூக விரோத கும்பலை சேர்ந்தவர்களே தலைமை கழகத்துக்குள் நுழைந்து விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தலைமை கழகம் மற்றும் இருபுறம் உள்ள சாலை சந்திப்புகள் உள்ளிட்ட இடங்களில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணை நாளை நடைபெறும் நிலையில், விரைவில் தீர்ப்பு வெளியாக இருக்கிறது. அப்போது மீண்டும் மோதல் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதையும் போலீசார் கருத்தில் கொண்டுள்ளனர். இதையடுத்து, அதிமுகவில் மோதல் விலகி இயல்பு நிலை திரும்பும் வரை உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள சென்னை மாநகர காவல்துறை முடிவு செய்துள்ளது.