அதிமுக கலவரம் தொடர்பான வழக்கில் சிபிசிஐடி போலீசார் 100 நபர்களை வீடியோ காட்சிகளை வைத்து அடையாளம் கண்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.
சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜூலை 11ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதே நாளில் அதிமுக அலுவலகத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் தங்கள் ஆதரவாளர்கள் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான நிர்வாகிகளுடன் சென்றார். அப்போது, எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களுக்கும், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுக்கும் மோதல் ஏற்பட்டு பலருக்கும் காயங்கள் ஏற்பட்டன.

இதுதொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுமட்டுமின்றி, மேலும் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. பிறகு நீதிமன்றம் உத்தரவுப்படி இந்த வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டது. இதில் முக்கிய குற்றவாளியாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் மீது 7 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் மற்றும் கை ரேகை நிபுணர்கள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் கடந்த 7ஆம் தேதி அதிமுக அலுவலகத்தில் ஆய்வு செய்தனர். சிபிசிஐடி போலீசார் அடுத்த கட்டமாக கலவரம் நடைபெற்ற நாளில் பதிவான காட்சிகளை கைப்பற்றி கலவரத்தில் ஈடுபட்ட நபர்களை அடையாளம் கண்டு வருகின்றனர். தற்போது வரை 100 நபர்கள் வரை அடையாளம் கண்டு உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர். அடுத்த கட்டமாக கலவரத்தில் தொடர்பு உடையவர்களை நேரில் அழைத்து விசாரிக்க சம்மன் வழங்க இருப்பதாகத் தெரியவருகிறது.