தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் குறைந்தபட்சம் 160 தொகுதிகளில் போட்டியிட வேண்டுமென அதிமுகவினர் முடிவெடுத்துள்ளனர். மீதமிருக்கும் 74 தொகுதிகளை மட்டும் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்ய அதிமுக தலைமை முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடக்க இன்னும் 10 மாதங்களே உள்ளது. இதையடுத்து, தேர்தலுக்கான முன்னோட்டப் பணிகளை அதிமுக இப்போதே துவங்கிவிட்டது. பூத் கமிட்டிகளை வலுப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பணிகளை அதிமுக தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே, சென்னையில், இது தொடர்பாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், நிர்வாகிகளுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.
பூத் பொறுப்பாளர்கள், ‘வாட்ஸ் அப் குரூப்’ ஆரம்பித்து, அதன் மூலம் உறுப்பினர்களிடம் தொடர்பில் இருக்க வேண்டும் என்றும் பூத்திற்கு ஒருவர், தலா 100 வாக்காளர்களை பின்தொடர வேண்டும் என்றும் என்றும் அறிவுறுத்தியுள்ளார். அதேபோல், முதன் முறையாக வாக்களிக்கும் இளைஞர்களை இணைத்து, அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார். இந்நிலையில், மீண்டும் அதிமுக – பாஜக கூட்டணி அமைந்துள்ளதால், வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி உறுதி என்று நிர்வாகிகளிடம் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.