அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 2026இல் அதிமுகவுக்கு மூடுவிழா காண்பார் என டிடிவி தினகரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”2026ஆம் ஆண்டு தேர்தலில் திமுக ஆட்சி வீழ்த்தப்படும். தமிழ்நாட்டில் முதல் முறையாக தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமையும். எடப்பாடி பழனிசாமி தம்மை காப்பாற்றிக் கொள்வதற்கு அதிமுகவை ஒரு கேடயமாக பயன்படுத்தி வருகிறார். திமுகவின் தேர்தல் வெற்றிகளுக்கு எடப்பாடி பழனிசாமி மறைமுகமாக உதவி வருகிறார்.
2026ஆம் ஆண்டில் அதிமுகவுடன் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி வைக்கிறதா? இல்லையா என்பதை விஜய்தான் சொல்ல வேண்டும். எடப்பாடி பழனிசாமியைப் பொறுத்தவரை தன்னுடன் இருப்பவர்களை நம்ப வைப்பதற்காக கூட்டணி வரும் என கூறுவார். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இருக்கின்றன என்பது எல்லோருக்குமே தெரியும். ஆனால், கூட்டணி அமையும்.. அமைந்துவிடும் என்று சொல்வதே எடப்பாடி பழனிசாமியின் ஏமாற்று வேலைதான்.
2024 லோக்சபா தேர்தலில் எடப்பாடி பழனிசாமியின் முடிவால்தான் திமுக வெற்றி பெற்றது. தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறுவதை எடப்பாடி பழனிசாமியின் முடிவுதான் தடுத்தது. ஜெயலலிதாவின் தொண்டர்கள் அனைவரும் எங்களுடன் இணைவார்கள். ஜெயலலிதாவின் ஆட்சி அமைய தேசிய ஜனநாயகக் கூட்டணியை பலப்படுத்துவார்கள்” என்று தெரிவித்துள்ளார்.