பாஜகவுடன் இனி கூட்டணி கிடையாது என அதிமுக அறிவித்துள்ள நிலையில், இது தொடர்பாக ஓபிஎஸ் பதிலளித்துள்ளார்.
பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகுவதாக அறிவித்தது. சென்னையில் நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியதற்கு அண்ணாமலை தான் காரணம் என்று சொன்னாலும், அரசியல் வட்டாரத்தில் வேறு பல்வேறு விஷயங்களும் இருப்பதாக கூறுகின்றன.
குறிப்பாக, தேசிய ஜனநாயக கூட்டணியில் டிடிவி தினகரன், ஓபிஎஸ் உள்ளிட்டோரையும் இணைக்க வேண்டும் என்று பாஜக விரும்பியதாகவும் இதற்கு அதிமுக எதிர்ப்பு தெரிவித்ததாகவும் சொல்லப்படுகிறது. அதுபோக பாஜக கேட்ட சீட்களின் எண்ணிக்கை உள்பட பல காரணங்களால் தான் அதிமுக இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூட்டணி அமைத்து அதிமுக தேர்தலை சந்திக்கும் என்று அக்கட்சி அறிவித்துள்ளது.
இதற்கிடையே, அதிமுக-பாஜக கூட்டணி முறிவு குறித்து இதுவரை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. எடப்பாடியுடன் கூட்டணி முறிந்துள்ளதால் பாஜகவுக்கு வேறு ஆப்ஷன் இல்லை. இனி ஓபிஎஸ் மற்றும் டிடிவியை தங்கள் அணிக்கு பாஜக அழைத்துக்கொள்ளும் என்று பேசப்படும் நிலையில், ஓபிஎஸ் மவுனமாக அடுத்தடுத்த அரசியல் நகர்வுகளை தற்போது வரை உன்னிப்பாக கவனித்து வருகிறார்.
இந்நிலையில் தான் இன்று செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸிடம், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அவர் எந்த பதிலும் அளிக்காமல் சென்றார். ஓபிஎஸ் அதிமுக – பாஜக கூட்டணி முறிவு பற்றி கருத்து எதுவும் தெரிவிக்காமல் சென்றது அரசியல் வட்டாரத்தில் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது.