அதிமுகவின் முன்னாள் அமைச்சரான திண்டுக்கல் சீனிவாசன் அப்போலோ மருத்துவமனையில் திடீரென்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதிமுகவில் உள்ள மூத்த தலைவர்களில் ஒருவர் திண்டுக்கல் சீனிவாசன். இவருக்கு வயது 75 ஆகும். இவர், திண்டுக்கல் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். முந்தைய அதிமுக ஆட்சிக்காலத்தில் வனத்துறை அமைச்சராக பதவி வகித்தார். அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாளராக மாறினார்.
ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் வகித்த பொருளாளர் பதவி திண்டுக்கல் சீனிவாசனுக்கு எடப்பாடி பழனிசாமி வழங்கினார். இந்நிலையில் தான் திண்டுக்கல் சீனிவாசன் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் திடீரென்று அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடலில் கட்டி இருப்பதாகவும், அதனை அகற்றும் சிகிச்சைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.