நெஞ்சுவலி காரணமாக அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது உடல்நிலையை கண்காணிக்க எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு சென்னை வரவுள்ளதாக் கூறப்படுகிறது.
தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் வீட்டில் நேற்று அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் அரசு இல்லத்திலும் சோதனை நடந்தது. அது போல் தலைமைச் செயலகத்தில் உள்ள செந்தில் பாலாஜியின் அறையிலும் சோதனை நடந்தது.
இதைத் தொடர்ந்து சென்னையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் 17 மணிநேரமாக நடந்த சோதனை முடிந்தது. சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டுக்கு அமலாக்கத் துறை அதிகாரிகள் வருகை தந்தனர். இந்த நிலையில் நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்திற்கு அமைச்சர் செந்தில் பாலாஜியை அழைத்துச் சென்றனர்.
அப்போது செந்தில் பாலாஜி தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறியதால் உடனடியாக அவர் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். உடனடியாக மருத்துவமனை வளாகம் முழுவதும் மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையினர், மாநில போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
செந்தில் பாலாஜி மயக்க நிலையில் இருப்பதாகவும், அவரால் பேச முடியவில்லை, காது அருகே காயம் போன்று இருப்பதாகவும் மருத்துவமனையில் அவரை பார்க்கச் சென்ற அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், உதயநிதி ஸ்டாலின், கே.என்.நேரு, சேகர் பாபு, பொன்முடி, ரகுபதி, அன்பில் மகேஸ், எ.வ.வேலு உள்ளிட்ட அமைச்சர்கள் நேரில் மருத்துவமனைக்கு வருகை தந்தனர்.
இந்நிலையில் செந்தில்பாலாஜி உடல்நிலையை கண்காணிக்க டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு சென்னை வருகை தர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளதாக இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஒருவேளை இது உறுதியானால் அவரை டெல்லிக்கு கொண்டு அமலாக்கத்துறை விசாரணை நடத்த வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. தொடர்ந்து செந்தில் பாலாஜி மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.