மஸ்கட் விமான நிலையத்திலிருந்து கொச்சிக்கு புறப்பட தயார் நிலையில் இருந்தபோது திடீரென விமானம் தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது .
ஓமன் நாட்டின் மஸ்கட் விமான நிலையத்தில் கேரள மாநிலம் கொச்சிக்கு புறப்பட தயார் நிலையில் ஏர் இந்திய விமானம் நின்றுகொண்டிருந்தது. அதில் 141 பயணிகள் அமர்ந்திருந்தனர். திடீரென விமானத்தில் தீப்பிடித்து புகை வெளியேறியது. உடனடியாக பயணிகள் வெளியேற்றப்பட்டனர். இருப்பினும் 14 பயணிகள் லேசான தீக்காயம் அடைந்தனர். விமான ஊழியர்கள் 6 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். இது தொடர்பாக ஏர்போர்ட் நிலைய அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பான வீடியோவும் வெளியாகி உள்ளது.
தீக்காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். முதல்கட்டமாக எஞ்சினில் ஏற்பட்ட பழுது காரணமாக விமானம் தீப்பிடித்திருக்கலாம் என கூறப்படுகின்றது. அதிர்ஷ்டவசமாக புறப்படுவதற்கு முன்பே கண்டறிந்து பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. கொச்சிக்கு செல்வதற்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள விமான நிலைய குழுவினர். அவர்களுக்கு தேவையான வசதிகள் செய்து தரப்படும் என தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் இது போன்ற சம்பவங்கள் நடப்பதாக பயணிகள் தெரிவிக்கின்றனர். அதிக அளவில் இது போன்ற நிகழ்வுகள் நடப்பதாகவும் தெரியவந்துள்ளது.