துணிவு படம் பார்க்க தியேட்டருக்குள் அனுமதிக்காததால் அஜித் ரசிகர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 11ஆம் தேதி நடிகர் அஜித்தின் துணிவு திரைப்படம் வெளியானது. எச்.வினோத் இயக்கியுள்ள இந்த படத்தில் நடிகை மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் வெளியானது முதலே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலை குவித்து வருகிறது. பொங்கல் பண்டிகை முடிந்த பின்னரும் துணிவு படத்தை பார்க்க தியேட்டருக்கு ரசிகர்கள் குவிந்து வருகின்றனர். இதற்கிடையே, தூத்துக்குடி பிரயண்ட் பகுதியைச் சேர்ந்த வீரபாகு என்ற அஜித் ரசிகர் தனது குடும்பத்துடன், போல்டன்புரத்தில் உள்ள கே.எஸ்.பி.எஸ் என்ற திரையரங்கிற்கு துணிவு படம் பார்க்க சென்றுள்ளார்.

அப்போது வீரபாகு மது அருந்தியிருந்ததால் தியேட்டரில் இருந்த பவுன்சர்கள் அவரை உள்ளே அனுமதிக்கவில்லை. அதே சமயம் அவரது குடும்பத்தினர் அனைவரும் தியேட்டருக்கு உள்ளே சென்றுள்ளனர். வீரபாகுவை பவுன்சர்கள் தியேட்டருக்குள் அனுமதிக்காத நிலையில், அவரின் குடும்பத்தின் முன்னிலையில் அவதூறாக பேசியதாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த வீரபாகு, தனது வீட்டுக்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.