கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ-வும், பாஜக மகளிரணி தேசியத் தலைவருமான வானதி சீனிவாசன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”தமிழ்நாட்டில் கள்ளச்சாராய சாவுகள் ஏற்பட ஆரம்பித்திருக்கிறது. மதுவிலக்கு ஏன் அமல்படுத்தவில்லை என்ற கேள்விக்கு அரசாங்கம் சொல்லும் ஒரே பதில் கள்ளச்சாராயம். ஆனால், கள்ளச்சாராயத்தால் சாவு ஏற்படுகிறது. இதற்கு அரசு பொறுப்பேற்க வேண்டும். ஆளுங்கட்சி ஆதரவோடு கள்ளச்சாராயம் விற்பனை நடைபெற்று வருகிறது. எந்த அரசியல் கட்சியினர் இதில் செயல்பட்டாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நல்ல சாராயம் குடித்துக் கொண்டும் ஒவ்வொரு நாளும் இறந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அதனால், மது குடிப்பவர்களின் ஆதார் எண்ணை கடையில் சரக்கு வாங்கும் போது இணைக்க வேண்டும். அதிகமாக குடித்து விட்டு இறந்து போனால் அரசு இழப்பீடு வழங்க வேண்டும். ஏனென்றால், இவ்வளவு சம்பாதித்தது எல்லாம் அரசுக்கு தான் கொடுக்கிறார்கள். அரசாங்கம் இது குறித்து தீவிரமாக சிந்திக்க வேண்டும். இளம் விதவைகள் அதிகமாக இருக்கும் மாநிலமாக தமிழகம் இருக்கிறது” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், ”நாட்டில் இருக்கும் 95% மக்களுக்கு 2,000 ரூபாய் நோட்டால் பிரச்சனை இல்லை. 2,000 ரூபாய் நோட்டு எங்கிருந்து வருகிறது என்பதை கண்காணித்தாலே நடவடிக்கை எடுப்பது சுலபம். 2,000 ரூபாயை கடைக்காரர்களோ, வியாபாரிகளோ வாங்க மறுத்தால் நடவடிக்கை எடுக்கலாம்” என்றார்.