கரூர் மாவட்டத்தில் வானில் இரு மர்ம ஒளிகள் வட்டமடித்த நிலையில், ஏலியன்கள் பூமிக்கு வந்துவிட்டார்களா? என பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான் – 3 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. இதில் உள்ள ரோவர், லேண்டர் நிலவில் தரையிறங்கியுள்ளது. ரோவர் நிலவில் தாதுக்கள், மண், நீர் உள்ளிட்டவை இருக்கின்றனவா என ஆராய்ச்சிகளை நடத்தி வருகிறது. அதில், முதற்கட்டமாக சல்ஃபர், மாங்கனீஸ், ஆக்ஸிஜன், சிலிக்கான் உள்ளிட்டவை இருக்கின்றன. நிலவில் இருந்த பள்ளத்தை ரோவர் தாண்டி சென்றது குறித்தெல்லாம் லேண்டர் அனுப்பிய வீடியோவை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், சூரியனில் ஆய்வு மேற்கொள்ள ஆதித்யா எல் 1 விண்கலமும் நேற்று ஏவப்பட்டது. அதில் 7 கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இவை சூரிய புயல் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்யவுள்ளது. சூரிய புயலால் விண்வெளியில் சுற்றி கொண்டிருக்கும் விண்கலங்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் சூரிய புயல்கள் குறித்து ஆய்வு மேற்கொள்வது பிரதானமாக உள்ளது.
இந்நிலையில், கரூர் மாவட்டத்திற்கு ஏலியன்கள் வந்துவிட்டார்களா என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர். ஏனென்றால், நேற்றிரவு 9 மணி முதல் 11 மணி வரை 2 மர்ம ஒளிகள் வானில் அங்கும் இங்குமாக பளீச் பளீச் என இருந்தது. இந்த இரு விளக்குகளும் மறைந்து மறைந்து ஒளிர்ந்து கொண்டே இருந்தது. இந்த ஒளி, குளித்தலை கடம்பர் கோயில், காவல் நிலையம், பேருந்து நிலையம், பெரிய பாலம் உள்ளிட்ட பகுதிகளில் தென்பட்டது.
இந்நிலையில், ஏலியன்கள் வந்துவிட்டதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்தனர். இதையடுத்து போலீஸார் விசாரணை நடத்தினர். அதில், கோயில் கும்பாபிஷேகத்தில் வானை நோக்கி யாரோ டார்ச் லைட் அடித்தது தெரியவந்தது. மீன்கார தெருவில் கோயில் கும்பாபிஷேகத்தில் விழா குழுவினர் வானத்தை நோக்கி டார்ச் லைட்டை அடித்ததுதான் இந்த குழப்பத்திற்கு காரணம் என தெரியவந்ததும் இதுகுறித்து பொதுமக்களுக்கு விளக்கி அவர்களின் பயம் போக்கப்பட்டது.