எடப்பாடி அருகே மருத்துவ கலந்தாய்வில் நிகழ்ந்த தொடர் தோல்வியால் தற்கொலை செய்துகொண்ட மாணவியின் குடும்பத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று ஆறுதல் கூறினார்.
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே குப்பதாசன் வளவு பகுதியைச் சோ்ந்த செந்தில்குமாா் – ஆனந்தி தம்பதியின் மகள் புனிதா (19). இவர், கடந்த இரண்டு ஆண்டுகளாக மருத்துவ கலந்தாய்வுக்காக பயிற்சி பெற்று வந்திருக்கிறார். அண்மையில் நடந்து முடிந்த மருத்துவ கலந்தாய்வில் புனிதாவிற்கு மதிப்பெண் குறைந்ததால் மருத்துவர் இடம் கிடைக்கவில்லை.
இதையடுத்து, மாணவி புனிதா நேற்று முன்தினம் நடைபெற்ற பாரா மெடிக்கல் மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வில் பங்கேற்றார். இதிலும் மாணவி புனிதாவிற்கு அரசு ஒதுக்கிட்டிற்கான இடம் கிடைக்காத நிலையில் மனம் உடைந்த மாணவி புனிதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று மாணவியின் வீட்டிற்கு நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”திமுக அரசு நீட் தேர்வை ரத்து செய்வதாக கூறி இரட்டை வேடம் போடுகிறது. நீட் தேர்வை கொண்டு வந்ததே திமுகதான். இன்றைக்கு அந்த தேர்வை ரத்து செய்வோம் என்று நாடகத்தை அரங்கேற்றுவதும் திமுகதான். இதனால் பாதிக்கப்படுவது மாணவர்கள்தான். நீட் தேர்வை ரத்து செய்வோம் என்ற திமுகவின் வெற்று அறிவிப்பினால்தான், நாம் இன்று விலைமதிக்க முடியாத உயிர்களை இழந்து கொண்டிருக்கிறோம்.
மத்தியில் காங்கிரஸ் கூட்டணியில் திமுக அங்கம் வகித்தபோதுதான் இந்த தேர்வு கொண்டு வரப்பட்டது. பல ஆண்டு காலமாகியும், நீட் தேர்வை ரத்து செய்ய என்ன நடவடிக்கை எடுத்தார்கள்..? இதனால், மாணவர்களுக்கு என்ன நன்மை கிடைத்துள்ளது. எதுவுமே கிடையாது, பொய்ச் செய்திகளை வெளியிட்டு மக்களை ஏமாற்றி ஒரு நாடகத்தைத்தான் அரங்கேற்றி வருகின்றனர்” என்று கண்டனம் தெரிவித்தார்.
Read More : பணக்கார ஆண்களுக்கு ஸ்கெட்ச் போட்டு மடக்கும் இளம்பெண்..!! இதற்கு பயிற்சி வேற இருக்காம்..!! பல கில்லாடிகள்..!!