இன்று முதல் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள், மதுபான பார்கள் 2 நாட்களுக்கு மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை ஆட்சியர் ரஷ்மிசித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “வடலூர் ராமலிங்க வள்ளலார் நினைவு நாள் 25ஆம் தேதி (இன்று), குடியரசு தினம் 26ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இந்த இரண்டு நாட்களில் தமிழ்நாடு மதுபான சில்லரை விற்பனை கடைகள் மற்றும் மதுக்கூடங்கள், கிளப்புகள், ஓட்டல்களில் உள்ள மதுபார்களை கண்டிப்பாக மூட வேண்டும்.
விதிமுறைகளை மீறி இந்த இரண்டு நாட்களிலும் மதுபானம் விற்பனை செய்யும் சில்லரை விற்பனை கடைகள், மதுக்கூடங்கள், கிளப்புகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று எச்சரித்துள்ளார். இதுபோலவே, அனைத்து மாவட்டங்களில் இருந்தும் டாஸ்மாக் கடைகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து 2 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், நேற்றுமுன்தினம் இரவு முதலே குடிமகன்கள், அதிகளவில் மதுபானங்களை வாங்கி ஸ்டாக் வைக்க துவங்கியுள்ளனர். பல இடங்களில் கைக்கொள்ளாமல் மதுபாட்டில்களை வாங்கிச் சென்றனர். சிலர் பைக்குகளிலும், கார்களிலும் பெட்டி பெட்டியாக மதுபானங்களை வாங்கிச் சென்றனர்.