அனைத்து ரேஷன் கடைகளுக்கும் சொந்தக் கட்டிடம் கட்டும் பணி மேற்கொள்ளப்படும் என அமைச்சர் பெரியகருப்பன் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (மார்ச் 21) கேள்வி நேரத்தின்போது, துணை சபாநாயகர் பிச்சாண்டி பேசுகையில், ”கீழ் பென்னாத்தூர் தொகுதிக்கு உட்பட்ட துணை கிராமங்களில் நியாய விலைக் கடைகள் இல்லை. இதனால், 2 கிலோமீட்டர் சென்று பொருட்களை வாங்க வேண்டிய சூழல் உள்ளது. எனவே, தமிழ்நாடு முழுவதும் துணை கிராமங்களில் பகுதிநேர நியாய விலைக் கடைகள் அமைக்க வேண்டும்” என கோரிக்கை வைத்தார்.
இதற்கு பதிலளித்த கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன், ”2021இல் திமுக ஆட்சிக்கு பிறகு இதுவரை 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நியாய விலைக் கடைகள் தொடங்கப்பட்டுள்ளது. எனவே, துணை சபாநாயகரின் கோரிக்கையும் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பேசிய எம்.எல்.ஏ. அசோக்குமார், ”சேதுபாவாசத்திரம், கொளக்குடி ஊராட்சியில் முழுநேர நியாய விலைக் கடைக்கு கட்டிடம் கட்டித் தருமாறு கோரிக்கை வைத்தார். இதற்கு பதிலளித்த அமைச்சர் பெரியகருப்பன், “தமிழ்நாட்டில் உள்ள 34,902 ரேஷன் கடைகளில் 6,218 ரேஷன் கடைகள் தனியார் மற்றும் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இதில், 2,545 கடைகளுக்கு சொந்தக் கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. எனவே, மீதமுள்ள அனைத்து கடைகளுக்கும் சொந்தக் கட்டிடம் கட்டும் பணி மேற்கொள்ளப்படும்” என தெரிவித்தார்.