உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த முதுநிலை மாணவி ஒருவர், தன்னுடைய ஆண் நண்பரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக நீதிமன்றத்தில் புகார் அளித்தார். சம்பவத்தன்று அவர் தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியதாகவும், அதனால் ஏற்பட்ட போதையில் அந்த ஆண் நண்பருடன் சென்றதாகவும், பின்னர் அவர் தன்னை வேறு இடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் கூறியுள்ளார்.
அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி, வழக்கு ஆவணங்கள், சாட்சியங்கள் மற்றும் பாதிக்கப்பட்டவளின் வாக்குமூலங்களை ஆராய்ந்தபோது, இது பலாத்காரத்துக்கான தேவையான சட்ட அடையாளங்களை பூர்த்தி செய்யவில்லை என கூறினார். மாணவி தன்னுடைய விருப்பத்தின் பேரில் ஆண் நண்பருடன் சென்றுள்ளார்; அவர் முதுநிலை படிப்பு படிக்கின்றவர் என்பதால், சூழ்நிலையை புரிந்துகொள்ளும் அறிவும், ஆளுமையும் அவருக்கு உள்ளது என்ற கருத்தை முன்வைத்தார். இதனை அடிப்படையாக கொண்டு, பலாத்காரம் அல்ல, பரஸ்பர ஒப்புதலுடன் நிகழ்ந்த உறவு எனக் கருதி, குற்றஞ்சாட்டப்பட்ட நபருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
முன்னதாக ஒரு வழக்கில் அலகாபாத் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு சர்ச்சையை ஏற்படுத்தியது. என்னவென்றால். 2021ம் ஆண்டு நடந்த ஒரு சம்பவத்தில், உத்தரபிரதேச மாநிலம் கஸ்கஞ்ச் பகுதியில் 11 வயது தெருவில் நடந்து சென்று கொண்டு இருந்தார். அந்த வழியாக வந்த இருவர் சிறுமியின் மார்பகங்களைப் பிடித்து, ஆடைகளை கிழித்து, அவளை அரைநிர்வாணமாக்க முயன்றனர்.
சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அந்த வழியாக சென்றவர்கள் வந்தபோது, இருவரும் அங்கிருந்து தப்பி ஓடினர். இதையடுத்து இருவர் மீது பலாத்கார முயற்சி மற்றும் போக்சோ சட்டப்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. விசாரணை நீதிமன்றம் அனுப்பிய சம்மனுக்கு எதிராக இருவரும் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில், மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுவை அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி ராம் மனோகர் நாராயண் மிஸ்ரா விசாரித்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது உடைகளை கிழிப்பது பாலியல் வன்கொடுமை குற்றம் அல்ல என தீர்ப்பு வழங்கியிருந்தார். இந்த தீர்ப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தொடர்ந்து அலகாபாத் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்நிலையில், மற்றொரு பாலியல் வழக்கில், அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி அளித்த தீர்ப்பு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.