இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் மறு உருவமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இருப்பதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் புகழ்ந்துள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அடுத்தாண்டு நடைபெறவுள்ள நிலையில், திமுக கூட்டணிகள் வலுவாக இருப்பதாக தெரிகிறது. ஆனால், எதிர்க்கட்சிகள் ஆங்காங்கே சிதறிக் கிடக்கின்றன. இந்நிலையில், டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து 2 மணி நேரத்திற்கும் மேலாக பேசினார். இதனால், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக இடம் பெறுவது கிட்டத்தட்ட உறுதியாகியிருக்கிறது.
ஆனால், அமித்ஷாவை சந்தித்த பிறகு, டெல்லி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ”உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் கூட்டணி குறித்து பேசவே இல்லை. மக்கள் பிரச்சனைகள், நிதி ஒதுக்கீடு பற்றி மட்டுமே பேசினோம். தமிழ்நாட்டில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகமாக இருப்பதாக அவரிடம் எடுத்துரைத்தோம். தமிழ்நாட்டின் சட்டம் – ஒழுங்கு குறித்து கேட்டு தெரிந்து கொண்டார். டாஸ்மாக் ஊழல் குறித்து பேசினோம்.
நாடாளுமன்ற மறுசீரமைப்பு குறித்து அமித்ஷாவிடம் எடுத்துரைத்தோம். முழுக்க முழுக்க மக்கள் பிரச்சனைகள் குறித்து பேசவே அமித்ஷாவை சந்தித்தோம். தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது, தேர்தல் நெருங்கும்போதுதான் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடக்கும். தேர்தலுக்கு ஓராண்டுக்கு முன்பாகவே கூட்டணி பற்றி பேச எந்த அவசியமும் இல்லை. கூட்டணி என்பது வேறு; கொள்கை என்பது வேறு. கொள்கை என்பது நிலையானது. கூட்டணி என்பது சந்தர்ப்ப சூழலுக்கு ஏற்ப மாறும்” என தெரிவித்தார்.
#JUSTIN "இந்தியாவின் இரும்பு மனிதர் வல்லபாய் படேலின் மறு உருவமாக இருக்கிறார் அமித் ஷா"
— News18 Tamil Nadu (@News18TamilNadu) March 27, 2025
அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்#EdappadiPalaniswami #RBUdhayakumar #AmitShah #ADMK #News18tamilnadu | https://t.co/3v5L32pe7b pic.twitter.com/sgQID3nJhA
இந்நிலையில், முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அமித்ஷாவை புகந்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் மறு உருவமாக பார்க்கப்படும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தமிழ்நாட்டின் இரும்பு மனிதர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசியுள்ளார். எடப்பாடி பழனிசாமி – அமித்ஷா சந்திப்பு தேசிய அளவில் கவனம் பெற்ற சந்திப்பாக மாறியுள்ளது, தமிழ்நாட்டின் உரிமைகளை பெற்றுத் தருவதற்காகவே எடப்பாடியார் அமித்ஷாவை சந்தித்துள்ளார்.
யார் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால், எடப்பாடி – அமித்ஷா சந்திப்பின் காரணம் என்ன என்பதை திண்ணை பிரச்சாரம் மூலம் மக்களுக்கு அதிமுகவினர் எடுத்துச் செல்ல வேண்டும்” என்று ஆர்.பிஉதயகுமார் தெரிவித்துள்ளார்.