”பிரதமரை உருவாக்கும் தேசிய கட்சியில் கூட்டணி அமைப்பது உறுதி” என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சென்னையை அடுத்த வானகரத்தில் அமமுக-வின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ”தொண்டர்களின் விருப்பத்திற்கேற்ப அடுத்த ஆண்டு திருச்சியில் பொதுக்குழு மாநாடு போல நடத்தப்படும் என்றார். அதிமுகவில் வகித்த பதவிகளை தூக்கி எறிந்துவிட்டு என்னுடன் 5 ஆண்டுகளாக பயணித்துக் கொண்டிருப்பவர்கள் நீங்கள்” என நெகிழ்ச்சியடைந்தார்.

தொடர்ந்து பேசிய அவர், ”எதையும் எதிர்பார்க்காத தன்னலமற்ற படை நம்மிடம் உள்ளது. அங்கே இருப்பது கூலியை எதிர்பார்த்து வேலை செய்யும் கூட்டம். வருங்காலத்தில் அமமுக தமிழ்நாட்டில் ஜெயலலிதாவின் ஆட்சியை அமைக்கும். உரிய நேரத்தில் அனைத்து மண்டலங்களிலும் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும். அதிமுகவின் தற்போதைய நிலை வருத்தமாக உள்ளது. பதவி வெறி, சுயநலம் கொண்டவர்களிடம் அதிமுக உள்ளது. எடப்பாடி பழனிசாமிக்கு 90 சதவீத ஆதரவு என்றால் வாக்குப் பெட்டியை வைத்து தேர்தல் நடத்த வேண்டியது தானே?. இரட்டை இலை சின்னத்தின் மரியாதையை அவர்கள் காட்டி விட்டார்கள். ஜனநாயக ரீதியில் நாம் வெற்றி பெற்ற பிறகு, தானாக அதிமுக நம்மிடம் வந்து சேரும்.

தன் பதவியை பறித்துவிட்டார்கள் என்ற கோவத்தில் சென்றார் ஓபிஎஸ். ஆனால், பிற்காலத்தில் தன் தவறை உணர்ந்து மாறிவிட்டார். ஆனால், எடப்பாடி பழனிசாமி மேலும் மேலும் தவறு செய்வதோடு, துரோகம் செய்து கொண்டே இருக்கிறார். சசிகலா, பன்னீர்செல்வம் தாண்டி ஜெயலலிதாவுக்கே துரோகம் செய்து கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. திமுகவின் ஆட்சி அமைய காரணம் எடப்பாடி பழனிசாமியின் கொள்ளைக் கூட்டம் தான் காரணம். தமிழ்நாடு மக்களுக்கு எதிர்ப்பாக இருந்த பாஜகவுடன் கூட்டணி வைக்க மாட்டேன் என தான் சொன்னதாக தெரிவித்த டிடிவி தினகரன், மக்கள் மன்றத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு தண்டனை நிச்சயம் என கூறினார்.

திமுகவின் தேவை ரெட் ஜெயிண்ட்ஸ் மூலம் அனைத்து படங்களையும் வாங்க வேண்டும் என்பது தான். மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்துவிட்டு திராவிட மாடல், சமூக நீதி என பேசி ஒரு குடும்பம் வாழ்கிறது. காங்கிரஸ் கட்சியை திமுக கலட்டி விட போகிறது. பாஜக, அல்லது காங்கிரஸ் கூட்டணி இருக்கும். ஆனால், அதில் திமுக இருக்கக் கூடாது. பிரதமரை உருவாக்கும் தேசிய கட்சியில் கூட்டணி அமைப்பது உறுதி. தமிழ்நாடு முழுவதும் சில இடங்களில் தொய்வாக உள்ளோம். நமக்கு வருங்காலம் நல்ல வாய்ப்பாக அமைய உள்ளது”. இவ்வாறு அவர் பேசினார்.