தமிழ்நாடு சட்டப்பேரவைக்குள் அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணியும், பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசனும் சுமார் 15 நிமிடங்களுக்கு மேலாக சபை நடவடிக்கைகளின் போதே ரகசியமாக பேச்சுவார்த்தை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் 2-வது பெரிய கட்சியாக இருந்தது அதிமுக. ஆனால், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, அதிமுக தலைவர்களை தொடர்ந்து இழிவாக விமர்சித்து வந்தார். இதனால் அதிமுகவினர் பெரும் கொந்தளிப்புக்குள்ளாகினர். மேலும், 2026 சட்டசபை தேர்தலில் தம்மையே முதல்வர் வேட்பாளராக அதிமுக ஏற்க வேண்டும் எனவும் பேசியதாகவும் கூறப்பட்டது. இது ஒட்டுமொத்த அதிமுகவையும் அதிரவைத்தது. இதனால் பாஜக தலைமையிலான கூட்டணியில் இருந்து விலகுவதாக அதிமுக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
அதேநேரத்தில் மத்தியில் ஆளும் பாஜக அரசை எதிர்த்தோ தமிழ்நாடு ஆளுநருக்கு எதிராகவோ எந்த ஒரு கருத்தையும் அதிமுக இதுவரை பகிரங்கமாக தெரிவிக்கவில்லை. ராமர் கோவில் விவகாரத்தில் மட்டும் கோவில் கட்டினால் ஓட்டு போடுவார்களா? என சற்று உரத்த குரலில் மத்திய அரசுக்கு எதிராக பேசியிருந்தார் எடப்பாடி பழனிசாமி. ஆனால், தமிழ்நாடு சட்டசபையில் ஆளுநர் ஆர்.என்.ரவி வெளிநடப்பு செய்த விவகாரத்தில் கூட கருத்து தெரிவிக்க மறுத்திருந்தார் எடப்பாடி பழனிசாமி.
இதற்கிடையே, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை மீண்டும் வலுப்படுத்தும் நடவடிக்கைகளை டெல்லி மேலிடம் மேற்கொண்டு வருகிறது. தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் அண்மையில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து இது தொடர்பாக பேசியதாகவும் கூறப்பட்டது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் ஜிகே வாசன் தமது கட்சியின் செயற்குழு கூட்டத்தில் எந்த கூட்டணிக்கு போகலாம் என நிர்வாகிகள் கருத்தை கேட்கும் போது அதிமுக + பாஜக கூட்டணி என ஒரு ஆப்ஷனையும் கொடுத்திருந்தார். அதிமுகவை மீண்டும் கூட்டணிக்கு இழுக்கும் பாஜக முயற்சிகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில், தமிழ்நாடு சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது திடீரென அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி, பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் இருவரும் அருகருகே அமர்ந்து சுமார் 15 நிமிடங்களுக்கு மேலாக ரகசியமாக பேசிக் கொண்டே இருந்தனர். எதிரும் புதிருமாகிவிட்டோம் என அறிவித்த அதிமுக, பாஜக தலைவர்கள் சட்டசபைக்குள் இப்படி ரகசியமாக பேசுகிறோம் என பகிரங்க பேச்சுவார்த்தை நடத்தியது சட்டசபை அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட வீடியோ பதிவுகளில் இடம் பெற்று தற்போது பேசுபொருளாகி இருக்கிறது.