பொன்னியின் செல்வன் வெற்றிக்கு பின் நடிகர் கார்த்தி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் தான் ஜப்பான். ராஜு முருகன் இப்படத்தை இயக்கி உள்ளார். இவர் இதற்கு முன்னர் குக்கூ, ஜோக்கர், ஜிப்ஸி போன்ற படங்களை இயக்கியுள்ளார். ஜப்பான் திரைப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக அனு இமானுவேல் நடித்துள்ளார். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இது நடிகர் கார்த்தியின் 25-வது படமாகும்.
ஜப்பான் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 10ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இப்படத்தின் ரிலீசுக்கு இன்னும் ஒரு நாளே உள்ளதால் அதன் புரமோஷன் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. ஜப்பான் படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ளார். இதற்கிடையே, இப்படத்திற்கு சிறப்பு காட்சிகள் இருக்குமா? இருக்காதா? என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது.
ரசிகர்கள் ஆசையை பூர்த்தி செய்ய ஜப்பான் படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி கோரி ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தமிழக அரசுக்கு முக்கிய கோரிக்கை ஒன்று முன்வைக்கப்பட்டது. அதை ஏற்ற அரசு, ஜப்பான் படத்தின் சிறப்பு காட்சியை திரையிட அனுமதி வழங்கியுள்ளது. இதனால் ஜப்பான் படத்தின் முதல் காட்சி நாளை காலை 9 மணிக்கு திரையிடப்பட உள்ளது உறுதியாகி உள்ளது.
மேலும், ஜப்பான் படம் தீபாவளி விடுமுறையில் ரிலீஸ் ஆவதால் நவம்பர் 10ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை 6 நாட்கள் சிறப்பு காட்சிகளை திரையிட்டுக்கொள்ள தமிழக அரசு அனுமதி வழங்கி இருக்கிறது. இதனால் ஒரு நாளை 5 காட்சிகள் வீதம் காலை 9 மணிக்கு முதல் காட்சி, நள்ளிரவு 1.30 மணிக்கு கடைசி காட்சி முடிவடைய வேண்டும் என்றும் அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனால் கார்த்தி ரசிகர்கள் குஷியாகி உள்ளனர்.
இந்நிலையில், நடிகர் விஜய்யின் லியோ திரைப்படத்திற்கு மட்டும் சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்காத தமிழக அரசு, கார்த்தியின் ஜப்பான் படத்திற்கு வழங்கியுள்ளதால், விஜய் ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர். விஜய் படத்திற்கு மட்டும் அரசியல் செய்வதாக குற்றம்சாட்டியுள்ளனர்.