ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவி சத்யா கொலை செய்யப்பட்ட வழக்கில், கைதான முன்னாள் காதலன் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளான்.
சென்னை கிண்டியை அடுத்த ஆலந்தூர் காவலர் குடியிருப்பு பகுதியில் தனது தாய்- தந்தையுடன் வசித்து வந்தவர் சத்யா (20). இவர், தியாகராய நகரில் உள்ள ஜெயின் கல்லூரியில் பிகாம் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று கல்லூரிக்கு செல்வதற்காக மதியம் 1.15 மணியளவில் பரங்கிமலை ரயில் நிலையத்திற்கு தனது பெண் தோழிகளுடன் வந்துள்ளார். அப்போது பிளாட்பாரத்தில் நின்று சத்யாவுடன் சண்டையிட்டுக் கொண்டிருந்த இளைஞர், கையைப் பிடித்து நடைமேடை 1-ல் பீச் நோக்கி வந்து கொண்டிருந்த ரயில் முன் தள்ளிவிட்டு கொலை செய்தார்.

ரயில் ஏறி இறங்கியதில் அடுத்த நொடியே சத்யாவின் தலை துண்டாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து, அந்த இளைஞர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். ரயில் நிலையத்திலிருந்து சத்யாவின் தோழிகள் மற்றும் பொதுமக்கள் அலறியடித்து கூக்குரலிட்டு ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார், சத்யாவின் துண்டான உடல் பாகங்களை கைப்பற்றி, உடற்கூராய்வுக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முதற்கட்ட விசாரணையில் காவலர் குடும்பத்திற்குள் ஏற்பட்ட காதல் விவகாரத்தில் இந்த கொலைச்சம்பவம் அரங்கேறியது தெரியவந்துள்ளது. கிண்டி அடுத்த ஆதம்பாக்கம் ராஜா தெரு காவலர் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் வரலட்சுமி, இவர் ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவரது, மகள் தான் சத்யா. இதற்கிடையே, இதே காவலர் குடியிருப்பில் வசித்து வரும் ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளர் தயாளன் என்பவரின் மகனான சதீஷ், மாணவி சத்யாவை பள்ளிப்பருவம் முதலே காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இவர்களின் காதல் விவகாரம், சத்யாவின் பெற்றோருக்கு தெரியவந்ததால் மகளை கடுமையாக எச்சரித்துள்ளனர். மேலும், சதீஷ் ஏரியா நண்பர்களோடு சேர்ந்து வேலைக்கு செல்லாமல் கஞ்சா போதை பயன்படுத்தி வந்துள்ளார். இதன் காரணமாக, சதீஷை விட்டு சத்யா பிரிந்து வந்துள்ளார். இதனால் கடந்த ஒரு வருடமாக சதீஷிடம் சத்யா சரியாக பேசாமல் இருந்துள்ளார். சத்யா மீது கோபத்தில் இருந்த சதீஷ், 3 மாதங்களுக்கு முன் அவரது கல்லூரிக்குச் சென்று சத்யாவின் முடியை பிடித்து அனைவர் முன்னிலையிலும் அடித்து அசிங்கப்படுத்தி உள்ளார்.

இதையடுத்து, சத்யாவின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட சதீஷை விசாரித்த போலீசார், இருவரது பெற்றோரும் காவல்துறையை சேர்ந்தவர்கள் என்பதால் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர். அதன் பின்னரும் சதீஷ் தெடர்ந்து சத்யாவிடம் பேச முயன்றுள்ளார். அவர் சமாதனம் அடையவில்லை என்று கூறப்படுகின்றது. இறுதியாக வியாழக்கிழமை பரங்கிமலை ரயில்நிலையத்தில் ரயிலுக்காக காத்திருந்த தோழிகளுடன் மாணவி சதியாவிடம் வலியச்சென்று வம்பிழுத்து சதீஷ் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இருவருக்கும் வாக்குவதம் முற்றியதால் சத்யா இனி தனக்கு கிடைக்க மாட்டாள் என்ற நிலைக்கு வந்த சதீஷ், செத்து ஒழி என்று ஆவேசமாக கத்தியபடி… தாம்பரத்தில் இருந்து வேகமாக வந்து கொண்டிருந்த மின்சார ரயில் முன்பு சத்யாவை பிடித்து தள்ளி கொலை செய்ததாக உடன் இருந்த தோழிகள் கண்ணீர் மல்க தெரிவித்தனர். தப்பி ஓடிய சதீஷை பிடிக்க 4 தனிப்படைகள் அமைத்து ரயில்வே போலீசார் தேடி வந்த நிலையில், துரைப்பாக்கத்தில் பதுங்கி இருந்த சதீஷை நள்ளிரவு 2 மணி அளவில் போலீசார் கைது செய்தனர். அவர் மீது ஏற்கனவே தியாகராயநகர், செயின்ட் தாமஸ் மவுண்ட் உள்ளிட்ட காவல்நிலையங்களில் வழக்கு இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், கைது செய்யப்பட்ட சதீஷ், “இரண்டு முறை சத்யாவை கொள்வதற்கு முயற்சி செய்ததாகவும் இந்த நிலையில் நேற்று ரயிலில் தள்ளிவிட்டு கொலை செய்ததாகவும் தானும் தற்கொலை செய்து கொள்வதற்காக துரைப்பாக்கம் பகுதியில் முயற்சி செய்ததாகவும்” வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதற்கிடையே மகள் சத்யா, கொலை செய்யப்பட்டதை அறிந்த தந்தை மாணிக்கத்திற்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து உறவினர்கள் அவரை உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி மாணிக்கம் உயிரிழந்தார்.