வாட்ஸ் அப் செயலியை சிலர் தவறுகளாக பயன்படுத்துவதை தவிர்க்க மெட்டா நிறுவனம் புதிய கட்டுப்பாடு ஒன்றை கொண்டு வந்துள்ளது.
அதன்படி, குழுக்களில் யாரெல்லாம் சேரலாம், யாரெல்லாம் சேரக்கூடாது என்பதை தீர்மானிக்க புதிய வழிமுறைகளை மெட்டா நிறுவனம் வழிவகை செய்துள்ளது. குறிப்பாக குழுவில் உள்ள உறுப்பினர்கள் தேவையற்ற செய்திகளை அனுப்பினால் அவற்றை அட்மின் டெலிட் செய்யலாமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய அப்டேட்டை ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் வெர்ஷனில் வெளியிடப்பட்டுள்ளது.
தற்போது வாட்ஸ் அப் பயனாளர் ஒருவர் இன்வைட் லிங்கை கிளிக் செய்து எந்த ஒரு குழுவுக்குள்ளும் நுழைய முடியும். ஆனால், இனி குரூப் அட்மினின் ஒப்புதல் இன்றி புதிய நபர்கள் குழுக்களுக்குள் இணைய முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் வாட்ஸ் அப் பயனாளர் ஒருவர் அக்கவுண்ட் மூலம் கூடுதலாக நான்கு செல்போன்களில் பயன்படுத்தும் வசதியை மெட்டா நிறுவனம் ஏற்படுத்தி கொடுத்துள்ளது.
தற்போது மொபைல் போனில் பயன்படுத்தப்படும் வாட்ஸ் அப் கணக்கை மடிக்கணினிகளில் ஸ்கேன் செய்து உபயோகிக்கலாம். மேலும், ஒரே சமயங்களில் பல்வேறு மடிக்கணினிகளும் வாட்ஸ் அப்பை பயன்படுத்த முடியும். இந்நிலையில், தற்போது பல்வேறு மொபைல் போன்களில் ஒரே வாட்ஸ் அப் கணக்கை பயன்படுத்தும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் வணிக ரீதியான வாட்ஸ் அப் கணக்கை பயன்படுத்துவோர் பெரிதும் பயனடைவர் என்று மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.