Mega project: 2030 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை உலகளாவிய டிஜிட்டல் உள்கட்டமைப்புடன் இணைக்க வாட்டர்வொர்த் என்ற மெகா திட்டத்தை மெட்டா நிறுவனம் செயல்படுத்த உள்ளது.
உலகின் மிக நீளமான கடலுக்கடியில் கேபிள் அமைப்பான ”புராஜெக்ட் வாட்டர்வொர்த்” திட்டத்தை மெட்டா அதன் மிகப்பெரிய சந்தைகளில் ஒன்றான இந்தியாவிற்கு கொண்டு வருகிறது. இந்த கடலுக்கடியில் கேபிள் திட்டம் 2030ம் ஆண்டுக்குள் செயல்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடலுக்குடியில் மொத்தம் 50,000 கிமீ தூரத்துக்கு கேபிள்கள் அமைக்கப்பட உள்ளன. இந்த கேபிள்கள் ஐந்து கண்டங்களை இணைக்கும். அதாவது இந்தியாவை அமெரிக்காவுடன் இணைக்கும் வகையில், ஐந்து கண்டங்களை உள்ளடக்கிய வகையில் இந்த கேபிள் அமைக்கப்படுகிறது. இது பூமியின் சுற்றளவை விட நீளமானது ஆகும். அண்மையில் பிரதமர் மோடி அமெரிக்கா சென்றிருந்த நிலையில், பல்வேறு ஒப்பந்தங்கள் போடப்பட்டன.
அப்போது அமெரிக்க-இந்திய கூட்டுத் தலைவர்களின் அறிக்கையின் ஒரு பகுதியாக இருக்கும் இந்த அறிவிப்பு, இந்தியாவின் வளர்ந்து வரும் டிஜிட்டல் நிலப்பரப்பில் மெட்டாவின் கவனத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இது தொடர்பாக மெட்டா நிறுவனம் கூறுகையில், ”ஆழமற்ற கடலோர நீர் போன்ற அதிக ஆபத்துள்ள மண்டலங்களில் சேதத்திலிருந்து பாதுகாக்க மேம்பட்ட ரூட்டிங் நுட்பங்கள் மற்றும் புதுமையான கேபிள் புதைப்பு உத்திகள் வாட்டர்வொர்த் திட்டத்தில் கடைபிடிக்கபடும்” என்று தெரிவித்துள்ளது.
“மெட்டா இந்தியாவில் பெரிய அளவில் முதலீடு செய்கிறது. இந்தியா அதன் மிகப்பெரிய சந்தைகளில் ஒன்றாகும். உலகின் மிக நீளமான, அதிக திறன் மற்றும் தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட கடலுக்குடியில் கேபிள் திட்டத்தை இந்தியா, அமெரிக்கா மற்றும் பிற இடங்களை இணைக்க மெட்டா கொண்டு வருகிறது” என்று மெட்டாவின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
”இந்த கேபிள் திட்டம்மூலம் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, மீள்தன்மை கொண்ட உள்கட்டமைப்பு மற்றும் டிஜிட்டல் உள்ளடக்கத்திற்கான மேம்பாடு வளர்ச்சி அடையும்” என்று மெட்டா கூறியுள்ளது. இணைய இணைப்புக்கும், நாடுகளை இணைப்பதற்கும், உள்ளூர் தொலைத்தொடர்பு ஆபரேட்டர்கள் வாடிக்கையாளர்களுக்கு சேவைகளை வழங்குவதற்கும் கடலுக்கடியில் கேபிள் நெட்வொர்க் மிக முக்கியமானது.
கடலுக்கடியில் 7,000 மீட்டர் ஆழத்தில் இந்த கேபிள்கள் அமைக்கப்படும் என தகவல் வெளியாகி இருக்கிறது. கடல்வாழ் உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், கடலில் மாசு ஏற்படாத வகையில் இந்த திட்டம் கொண்டு வரப்படும் என கூறப்பட்டுள்ளது. ”பல பில்லியன் டாலர் மதிப்புள்ள இந்த திட்டம் அதன் பயன்பாடுகள் மற்றும் சேவைகளை ஆதரிக்கும் உலகளாவிய டிஜிட்டல் நெட்வொர்க்கை அதிகரிக்கும் என்று மெட்டா கூறியது.
Readmore: Gold Rate | தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு.. அதிர்ச்சியில் நகைப் பிரியர்கள்..!!