ஏ.ஆர்.ரஹ்மானும், சாய்ரா பானுவும் பிரிவதாக அறிவித்துள்ள செய்தி தான் தமிழ் திரையுலகில் விவாதப் பொருளாக மாறி உள்ளது. மிகுந்த வேதனை உடன் இந்த முடிவை எடுத்திருப்பதாக ஏ.ஆர். ரஹ்மானின் மனைவி சாய்ரா கூறியுள்ளார். சாய்ரா பானுவின் வழக்கறிஞர் வந்தனா ஷா வெளியிட்டுள்ள அறிக்கையில் ” திருமணமாகி பல வருடங்களுக்குப் பிறகு, திருமதி சாய்ரா தனது கணவர் திரு. ஏ.ஆர். ரஹ்மானை விட்டுப் பிரிவதற்கான கடினமான முடிவை எடுத்துள்ளார். இந்த முடிவு அவர்களின் உறவில் ஏற்பட்ட உணர்ச்சி அழுத்தத்திற்குப் பிறகு எடுக்கப்பட்டது. ஒருவருக்கொருவர் ஆழ்ந்த அன்பு வைத்திருந்தாலும், அவர்களுக்கு இடையே ஒரு தீர்க்க முடியாத இடைவெளி உருவாகி உள்ளது.” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஏ.ஆர். ரஹ்மான் உடைந்து போன இதயங்களின் வலியை கண்டால் கடவுளின் சிம்மாசனம் நடுக்கம் காணும் என்று பதிவிட்டுள்ளார். ஏ.ஆர். ரஹ்மான் விவாகரத்து குறித்து பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணம் இருக்கின்றன. அந்த வகையில் தற்போது அவரின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
நாட்டிலேயே அதிக வருமானம் ஈட்டும் இசைக்கலைஞர்களில் ஒருவராக ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளார், அவருடைய சொத்து மதிப்பு ரூ.1,728 கோடி முதல் ரூ.2,000 கோடி வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு பாடலுக்கும் 3 கோடி ரூபாய் சம்பளம் வாங்குவதால், அவர் நாட்டின் பணக்கார ஆண் பாடகர் என்று கருதப்படுகிறார்..
ஒவ்வொரு படத்திற்கும் சுமார் 10 கோடி ரூபாய் சம்பளம் பெறுவதால், நாட்டிலேயே அதிகம் சம்பாதிக்கும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் என்றும் கூறப்படுகிறது. திரைப்பட இசை, இசை உருவாக்கம், உலகளாவிய கச்சேரி சுற்றுப்பயணங்கள் என பல வழிகளில் இருந்து அவருக்கு வருமானம் கிடைக்கிறது..
இந்தியா மட்டுமின்றி சர்வதேச அளவில் ஏ.ஆர். ரஹ்மான் கவனம் ஈர்த்து வருகிறார். தேசிய திரைப்பட விருதுகள், அகாடமி விருதுகள், கிராமி விருதுகள் மற்றும் பத்ம பூஷன் உட்பட பல விருதுகளை அவர் பெற்றுள்ளார். தனது இசையின் மூலம் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாக கோடிக்கணக்கான ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.
இந்த சூழலில் ஏ.ஆர். ரஹ்மான் – சாய்ராவின் விவாகரத்து சினிமா துறையில் மிகவும் விலையுயர்ந்த விவாகரத்துகளில் ஒன்றாக மாறுமா என்ற கேள்விகள் எழுகின்றன. எனினும் சொத்து பங்கீடு அல்லது இழப்பீடு குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.