சிஏஏ-வை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
தனியார் செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில், ”நம் தேசத்தில் இந்தியக் குடியுரிமையை உறுதி செய்வது இறையாண்மை சார்ந்த உரிமை. அதில் எந்த சமரசமும் செய்யப்படாது. சிஏஏ-வை திரும்பப்பெறும் பேச்சுக்கே இடமில்லை. சிஏஏ யாருடைய குடியுரிமையும் பறிக்காது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை நிறைவேற்றியுள்ளோம். 2019ஆம் ஆண்டிலேயே அதனை நிறைவேற்றிவிட்டோம். கொரோனாவால் தான் அது அமலாக்குவது தடைபட்டது.
ஆகையால் இதில் அரசியல் ஆதாயம், நட்டம் என்ற பேச்சுக்கு எல்லாம் இடமில்லை. சிஏஏ தேசத்துக்கான சட்டம். இச்சட்டம் அமலுக்கு வரும் என்று நான் சுமார் 41 முறையாவது கூறியிருப்பேன். இண்டியா கூட்டணிக் கட்சித் தலைவர்களின் சிஏஏ எதிர்ப்பு கருத்துகள், ஆட்சிக்கு வந்தால் சிஏஏவை திரும்பப் பெறுவோம் என்று கூறி வருகின்றனர். முதலில் இண்டியா கூட்டணிக்கு தாங்கள் ஆட்சிக்கு வருவோம் என்ற முழு நம்பிக்கை இருக்கிறதா?. சிஏஏவை பாஜக அரசு கொண்டுவந்துள்ளது. அதனைத் திரும்பப் பெறுவது எளிதல்ல. நாங்கள் இது குறித்து நாடு முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்துவோம். அதன்மூலம் சிஏஏவை ரத்து செய்ய விரும்புவோர் ஆட்சிக்கே வர இயலாது.
மேலும், ஆகஸ்ட் 15, 1947 மற்றும் டிசம்பர் 31, 2014 க்கு இடையில் இந்தியாவுக்குள் நுழைந்தவர்கள் அனைவரும் இங்கு வரவேற்கப்படுகிறார்கள். எனக்கு தெரிந்தபடி, 85 சதவீதம் பேர் உரிய ஆவணங்களை வைத்துள்ளனர். ஆவணங்கள் இல்லாதவர்களுக்கு தீர்வு காண்போம். அரசியலமைப்பின் விதிகளின்படி இந்தியாவில் குடியுரிமைக்கு விண்ணப்பிக்க முஸ்லிம்களுக்கு கூட உரிமை உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
Read More : Dogs | ”கடிச்சா உயிரே போயிரும்”..!! பிட்புல் போன்ற கொடூரமான நாய் இனங்களுக்கு மத்திய அரசு தடை..!!