ஜப்பான் நாட்டை பூர்வீகமாக கொண்டு இயங்கும் இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனம் கவாசகி (Kawasaki). இந்நிறுவனம் புதிய பைக் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. பொதுவாக பைக்குக்கு இரண்டு சக்கரங்கள் இருக்கும், கரடு முரடான பாதையிலும், மலைகளின் மீதும் எற முடியாது. ஆனால் கவாஸாகி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள இந்த கோர்லியோ (Kawasaki Corleo) பைக்குக்கு சக்கரங்கள் கிடையாது. அதற்கு பதிலாக விலங்கு போல் 4 கால்கள் இதற்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் கரடு முரடான பாதைகளிலும், மலைகளின் மீதும் எளிதாக பயணிக்கலாம். இந்த புதிய பைக் உலகையே மிரளவைத்துள்ளது.
டோக்கியோவில் நடந்த 2025 சர்வதேச ரோபோ கண்காட்சியில் இந்த kawasaki Corleo Robot பைக்கை அறிமுப்படுத்தியுள்ளது காவாசகி நிறுவனம். இது செயற்கை நுண்ணறிவை சுத்தமான ஆற்றல் தொழில்நுட்பத்துடன் இணைக்கும் கண்டுபிடிப்பைக் காட்டுகிறது. இந்த ரோபோ பைக் பெட்ரோல், பேட்டரிகளால் இயங்க கூடியது இல்லை, மாற்றாக ஹைட்ரஜன் உதவியுடன் AI மூலம் இயங்கக்கூடியது. இது உலோகம் மற்றும் கார்பன் பொருட்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த ரோபோ பைக், ஓநாய்களின் சுறுசுறுப்பால் ஈர்க்கப்பட்டு, சீரற்ற நிலப்பரப்புகளை சிரமமின்றி கையாளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பாரம்பரிய மோட்டார் சைக்கிள்களைப் போல் அல்லாமல், தன்னியக்கமாக நகரும் இந்த பைக், மான் மற்றும் சிறுத்தைகள் போன்ற விலங்குகளை போல் பிரதிபலிக்கிறது. இந்த பைக் மணிக்கு 80 கிமி வேகம் போகக்கூடிய ஆற்றல் கொண்டுள்ளது.
இந்த ரோபோவில் ஏறி சவாரி செய்பவர்கள் குதிரையைப் போல கரடுமுரடான, மலைப்பகுதிகளில் எளிதாக பயணம் செய்யலாம். கோர்லியோ ரோபோவானது, ஹைட்ரஜனில் 150 சிசி எஞ்சினில் இயங்கக் கூடியதாகும். இந்த ரோபோவின் உடல், கவாசாகியின் மோட்டார் சைக்கிள் வடிவமைப்புகளில் இருந்து உத்வேகம் பெற்று, உலோகம் மற்றும் கார்பன் பொருட்களின் கலவையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இதில், மிகவும் தனித்துவமான அம்சங்களில் ஒன்று அதன் கட்டுப்பாட்டு அமைப்பு தான். இதில் சவாரி செய்பவர்களுக்கு கைப்பிடிகள் அல்லது பட்டன்கள் தேவையில்லை. அதற்கு பதிலாக, ரோபோ சவாரி செய்பவரின் உடல் அசைவுகளுக்கு ஏற்ப பயணிக்கிறது. இந்த ரோபோவை அடுத்த 25 ஆண்டுகளில் மக்கள் பயன்படுத்தும் வகையில், திட்டமிடப்பட்டுள்ளது.