ஒமேகா ஸ்கை மொபிலிட்டி ஓஎஸ்எம் என்ற நிறுவனம் இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களைத் தயாரிக்கும் ஒரு முக்கியமான நிறுவனமாக இருக்கிறது. இந்நிறுவனம் லாஸ்ட் மெயில் டெலிவரி என்ற செக்மென்டை குறி வைத்து தனது தயாரிப்புகளை சரக்கு வாகனங்களாக அதிக எண்ணிக்கையில் விற்பனைக்காக வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் இந்நிறுவனம் அடுத்ததாகப் பயணிகள் ஆட்டோ செக்மென்ட்டை குறிவைத்து தனது தயாரிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்தியாவிலேயே குறைந்த விலையில் எலெக்ட்ரிக் பயணிகள் ஆட்டோவை இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த ஆட்டோ நகர்ப்புற மற்றும் கிராமப்புற பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டு விற்பனைக்கு வருகிறது.
ஓஎஸ்எம் ஸ்ட்ரீம் சிட்டி என்ற பெயரில் இந்நிறுவனம் இந்த ஆட்டோவை அறிமுகப்படுத்தியுள்ளது. ஓஎஸ்எம் ஸ்ட்ரீம் சிட்டி ஏடிஆர் மற்றும் ஓஎஸ்எம் ஸ்ட்ரீம் சிட்டி 8.5 என இரண்டு விதமான வேரியண்ட்களில் இந்த ஆட்டோ விற்பனைக்கு வருகிறது. இதில் ஓஎஸ்எம் ஸ்ட்ரீம் சிட்டி ஏடிஆர் வேரியன்ட் எலெக்ட்ரிக் ஆட்டோ கிராமப்புறங்களுக்கும் ஓஎஸ்எம் ஸ்ட்ரீம் சிட்டி 8.5 எலெக்ட்ரிக் ஆட்டோ நகர்ப்புறங்களுக்கும் ஏற்றதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் ஓஎஸ்எம் ஸ்ட்ரீம் சிட்டி ஏடிஆர் வேரியண்ட் ஆட்டோ ஸ்வெப்பபிள் பேட்டரி பேக்கை கொண்டது. இது ரூபாய் 1.85 லட்சம் என்ற நிலையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அடுத்ததாக ஓஎஸ்எம் ஸ்ட்ரீம் சிட்டி 8.5 ரக எலெக்ட்ரிக் ஆட்டோ ஃபிக்சட் பேட்டரி பேக் உடன் வருகிறது. இது ரூ3.01 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் ஓஎஸ்எம் ஸ்ட்ரீம் சிட்டி 8.5 ஆட்டோவில் பெயருக்கு ஏற்றார் போல் 8.5 கிலோ வாட் ஹவர் லித்தியம் அயான் பேட்டரி பேக் பொருத்தப்பட்டுள்ளது. இது முழு சார்ஜில் 117 கிலோ மீட்டர் வரை ரேஞ்ச் தரும். இந்த பேட்டரி 4 மணி நேரத்தில் சார்ஜ் ஏற்றுக் கொள்ளும் திறன் கொண்டது. இந்த ஆட்டோவில் பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் இருக்கிறது. ட்ரம் பிரேக், லோ ரோலிங் ரெசிஸ்டன்ஸ் டயர்கள், ஸ்மார்ட் கனெக்டிவிட்டி, ஆகிய ஆப்ஷன்கள் இதில் உள்ளன.
இந்த எலெக்ட்ரிக் ஆட்டோ மூன்று பயணிகள் மற்றும் ஒரு டிரைவர் பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது பயன்பாட்டில் உள்ள ஆட்டோவை போலவே இதுவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஓஎஸ்எம் ஸ்ட்ரீம் சிட்டி ஏடிஆர் வேரியண்டில் பேட்டரிக்காக 6.3 கிலோ வாட் ஹவர் பேட்டரி வழங்கப்படுகிறது. இந்த இரண்டு பேட்டரிகளும் 48 வாட்ஸ் பவர் சப்ளையில் சார்ஜ் ஏற்றிக்கொள்ளும் திறன் கொண்டது. இதில் பொருத்தப்பட்டுள்ள மோட்டார் 9.5 கிலோ வாட் பவரையும் 430 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இது குறித்து இந்நிறுவனத்தின் சேர்மன் உதை நரங்க் கூறும் போது: “எங்கள் நிறுவனத்தில் தொடர்ந்து புதுமைக்கு முக்கியத்துவம் அளிப்போம். எங்கள் தயாரிப்புகள் எல்லாம் போட்டியாளர்களுக்கு ஒரு படி முன்னிலையில் தான் எப்போதும் இருக்கும்.
இதுவரை மூன்று சக்கர வாகனங்களில் சரக்கு வாகனங்களை மட்டும் அறிமுகப்படுத்தி வந்தோம். தற்போது பயணிகள் செக்மெண்டிற்குள் இறங்கி உள்ளோம். எங்கள் நிறுவனம் 2024-ம் நிதியாண்டில் 10,000 எலெக்ட்ரிக் 3 வீலர்களை தயாரிக்கும் அளவிற்குத் திறனை வளர்த்துள்ளோம். அதன் பலனாக ஓஎஸ்எம் ஸ்ட்ரீம் சிட்டி ஆட்டோ மிகப்பெரிய அளவில் விற்பனையைப் பெறும் என நம்புகிறோம். எங்கள் வாகனங்களைப் பயன்படுத்துவது மூலம் ஆட்டோ டிரைவர்கள் 15 முதல் 20 சதவீதம் வரை தங்கள் வருமானத்தைப் பெருக்கிக் கொள்ள வாய்ப்புள்ளது.”என கூறினார் டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் குறிப்பாகத் தமிழகத்தில் எலெக்ட்ரிக் ஆட்டோகளுக்கான தேவை மிக அதிகமாக இருக்கிறது. தற்போது பெட்ரோல் ஆட்டோக்களை பயன்படுத்தி வரும் ஓட்டுநர்கள் எலெக்ட்ரிக் ஆட்டோவிற்கு மாறினால் அதிகமான லாபத்தைச் சம்பாதிக்க முடியும். இதற்குக் குறைந்த விலை எலெக்ட்ரிக் ஆட்டோ அவசியம் அதை தற்போது ஓஎஸ்எம் நிறுவனம் செய்துள்ளது. இதனால் இந்நிறுவனத்தின் விற்பனை அதிகரிக்கும் என நம்பலாம்.