அயோத்தியில் ஒரு தனித்துவமான வங்கி செயல்பட்டு வருகிறது. பண பரிவர்த்தனைகள் எதுவும் இதில் கிடையாது. சிறு புத்தகங்களின் எல்லா பக்கங்களிலும், ‘சீதாராம்’ என்று எழுதி இதில் டெபாசிட் செய்கின்றனர். இது பக்தர்களுக்கு மனநிறைவைத் தருவதாகக் கூறுகிறார்கள்.
அயோத்தியில் 1970இல், ஸ்ரீ ராம்ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் தலைவரான, மஹந்த் நிருத்ய கோபால் தாஸ் ஒரு ஆன்மீக வங்கியை நிறுவினார். இது ‘சர்வதேச ஸ்ரீ சீதாராம் வங்கி’ என்று அழைக்கப்படுகிறது. இந்த வங்கியில் தற்போது இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, நேபாளம், பிஜி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உட்பட வெளிநாடுகளில் இருந்தும், சுமார் 35,000 நபர்கள் கணக்கு வைத்திருக்கிறார்கள்.
இந்த தனித்துவமான வங்கியில் பண பரிவர்த்தனைகள் கிடையாது. இந்த வங்கியில் கணக்கை தொடங்க ஒரு நபர் குறைந்தது 5 லட்சம் முறை ‘சீதாராம்’ என்று எழுத வேண்டும். அதன் பின்னர் அவருக்கு பாஸ்புக் வழங்கப்படும். பக்தர்களுக்கு சிவப்பு பேனா மற்றும் புத்தகங்கள் இலவசமாக வங்கியால் வழங்கப்படுகிறது. பின்பு ஒவ்வொரு கணக்கும் வங்கியால் கண்காணிக்கப்படுகிறது.
இங்கு டெபாசிட் செய்வதற்கு ரொக்கம் தேவை இல்லை. மாறாக ‘சீதாராம்’ என்று எல்லா பக்கங்களிலும் எழுதப்பட்ட, சிறு புத்தகங்களே சேமித்து வைக்கப்படுகிறது. தற்போது சீதாராம் என்று எழுதப்பட்ட 20,000 கோடி சிறு புத்தகங்களை வங்கி சேமித்து வைத்திருக்கிறது.
இதுகுறித்து வங்கியின் மேலாளர் புனித் ராம் தாஸ் மகராஜ் கூறுகையில், சீதாராம் என்று எழுதப்பட்ட சிறு புத்தகங்களை தபால் மூலமாகவும் அனுப்பலாம் என்று தெரிவித்தார். மேலும் இந்த வங்கிக்கு, உலகெங்கும் 136 கிளைகள் இருப்பதாகவும் கூறினார். தற்போது அயோத்தியில் ராமர் கோவில் திறந்ததை ஒட்டி, இந்த வங்கிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதாகவும் கூறினார்.
மேலும் இந்த வங்கியில் சேமிப்பதால் மக்களுக்கு கிடைக்கும் பயன் என்ன என்ற கேள்விக்கு, இது ஒரு வகை பிரார்த்தனை வடிவம் என்றும், நமக்கு அமைதி, நம்பிக்கை மற்றும் நல்லொழுக்கம் கிடைப்பதற்காக கோவில்களுக்கு செல்வதைப் போல, இந்த வங்கியில் சேமிப்பதையும் கருதலாம் என்றும் கூறுகிறார். மேலும் ஒருவர் 84 லட்சம் முறை ‘சீதாராம்’ என்ற பெயரை எழுதினால் அவருக்கு ‘மோட்சம்’ கிடைக்கும் என்று வங்கியின் மேலாளர் தெரிவித்தார்.
வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள், இது தங்களுக்கு மனநிறைவை கொடுப்பதாக கூறுகிறார்கள். கோயிலுக்கு சென்று பிரார்த்தனை செய்வதற்கு பதிலாக, ‘சீதாராம்’ என்று எழுதுகிற பழக்கத்தை மேற்கொள்வதாகவும் சிலர் தெரிவித்துள்ளனர். ஒரு சிலர் கோடிக்கணக்கில் பெயர் எண்ணிக்கை கொண்ட புத்தகங்களை டெபாசிட் செய்துள்ளனர்.