ஆனைமலையின் வடபுறம் உள்ள நரசிங்கம் கிராமப்பகுதியில் பழமையான முருகன் குடவரைக் கோவிலுக்கு அருகில், யோக நரசிங்கப் பெருமாளுக்கும் ஒரு குடவரை ஆலயம் உள்ளது. பகவான் ஶ்ரீ விஷ்ணு எடுத்த 10 அவதாரங்களில் 4வது அவதாரமான நரசிம்மர் அவதாரம், முதன் முதலில் இங்கு தான் எடுக்கப்பட்டதாக இங்குள்ள மக்களால் நம்பப்படுகிறது. இது சுமார் 1,500 முதல் 2,000 ஆண்டுகள் பழமையான கோயில் என்றும் இங்குள்ள மக்களால் கூறப்படுகிறது.
கட்டிடக்கலையில் கை தேர்ந்த பல்லவர்கள் இந்த கோவிலை கட்டியதாகவும், அதன் பின் மதுரையை ஆட்சி செய்த பாண்டியர்கள் இந்த கோவிலை பராமரித்து வந்ததாகவும் வரலாறுகள் தெரிவிக்கின்றன. இந்த கோவிலில் இறைவனாக ஸ்ரீ யோக நரசிம்மர் மற்றும் இறைவியாக நரசிங்கவல்லி இருந்து பக்தர்களுக்கு அருள் புரிகின்றனர். நரசிம்மர் கோவில்கள் பலவற்றுள் மிகப் பெரும் நரசிம்ம மூலவர் விக்ரகம் இந்த கோவிலில் தான் அமைந்துள்ளது.
கோயில் அமைப்பு : சுமார் 6 அடி அகல, நீள, உயரக் கருவறையும், யோக நரசிம்மப் பெருமாள் திருவுருவும், கருவறைக்கு முன் உடையவரும் நம்மாழ்வாரும் உள்ள அர்த்த மண்டபமும் குடைவு அமைப்புகள். பிற மண்டபங்கள் கட்டுமானமே. கருடாழ்வார் மண்டபமும், ஆலய வளாகத்தின் வடகீழ் பகுதியில் உள்ள நரசிங்கவல்லித் தாயாரின் தனிக்கோவிலும் பிற்கால அமைப்புகளாகத் தெரிகின்றன.
ஆலயத்தை ஒட்டி கிழக்கு, வடகிழக்காக, மலையின் அடிவாரத்திலேயே சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் சதுரவடிவ நன்னீர்ப் பொய்கை உள்ளது. காலவசத்தால், சம்பு, தர்ப்பை மற்றும் காட்டுச் செடிகள் வளர்ந்து, நீர்ப்பரப்பே தெரியாத அளவுக்கு மறைந்திருந்த பொய்கையின் நிலை தற்போது மாறிவிட்டது.
கோயில் சிறப்பு : கல்வி பயிலுகின்ற மாணாக்கர்கள் இந்த கோவிலுக்கு வந்து நரசிம்ம மூர்த்தியை வழிபட்டால் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என்று நம்பப்படுகிறது. இங்கு உள்ள நரசிங்கவல்லி தாயாரை வணங்கும்போது திருமண தடை, திருமண தாமதம், குழந்தை இன்மை பிரச்சனைகள் இருக்கும் தம்பதிகளுக்கு அவர்கள் வேண்டும் வரம் கிடைக்கும் என்றும் நம்பப்படுகிறது.
இங்கு, நரசிம்மர் மற்றும் தாய் நரசிங்கவல்லி இருவருக்கும் வஸ்திரங்கள் சாற்றும் பழக்கம் இருக்கிறது. இவ்வாறு செய்வதால் குடும்பத்தில் உள்ள வறுமை நீங்குவதாக நம்பப்படுகிறது. திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கிரிவலம் போவது போல இந்த கோவிலில் உள்ள ஆனைமலையை சுற்றி பக்தர்கள் கிரிவலம் மேற்கொள்கின்றனர். பௌர்ணமி தினத்தில் தான் இந்த கிரிவலம் மேற்கொள்ளப்படுகிறது.