தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். இதில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளிகளுக்கு, நடப்பாண்டுக்கான அனுமதி ஆணைகளை அமைச்சர் அன்பில் மகேஷ் வழங்கினார்.
இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெறவிருந்த அரசு விழாவுக்காக தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் வழியாக அமைச்சர் அன்பில் மகேஷ் சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, அவர் காரிமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின் பெங்களுரு நாராயணா ஹிருதாலயா தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அமைச்சர் அன்பில் மகேஷின் உடல்நலம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால், இதுவரை எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை. அமைச்சருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் திமுகவினர் மத்தியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.