பாமக தலைவராக அன்புமணி பணியாற்றி வந்த நிலையில், நேற்று செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ், இனி பாமக செயல் தலைவராக மட்டுமே அன்புமணி இருப்பார் என்றும் கட்சியின் தலைவர் நான் தான் என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார். 2026 சட்டமன்ற தேர்தலில் இளைஞர்களை வழிநடத்தவே இந்த முடிவை எடுத்திருப்பதாக ராமதாஸ் கூறியுள்ளார். ஆனால், ராமதாஸின் இந்த அவசர அறிவிப்புக்கு பின்னணியில் அமித்ஷாவும் ஒரு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.
ஏற்கனவே கூட்டணி விவகாரத்தில் ராமதாஸுக்கும், அன்புமணிக்கும் பனிப்போர் இருந்ததாக தகவல் வெளியானது. முக்கியமாக 2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைப்பதில் ராமதாஸுக்கு ஆரம்பம் முதலில் உடன்பாடு இல்லை எனவும் அதிமுகவுடன் தேர்தல் களத்தில் பயணிப்பதே பாமகவின் எதிர்காலத்திற்கு நன்மையாக விளங்கும் என்று ராமதாஸ் முடிவெடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஆனால், தந்தையின் முடிவுக்கு மாறாக தேசிய ஜனநாயக கூட்டணிக்கு செல்வதிலேயே அன்புமணி முனைப்பு காட்டி வருவதாக தெரிகிறது. 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைப்பதே ராமதாஸின் எண்ணமாக இருப்பதாக பாமக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், பாஜகவுடன் கூட்டணி வைத்தால், மத்திய அமைச்சரவையில் இடம்பெறலாம் என்பது அன்புமணியின் கணக்காக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், மத்திய அமைச்சர் அமித்ஷா சென்னை வந்துள்ள சூழலில், அவரை சந்திக்க அன்புமணி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அப்போது 2026 சட்டமன்ற தேர்தல் கூட்டணியை உறுதிப்படுத்த வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனையறிந்த ராமதாஸ், பாஜகவுடன் கூட்டணியை உறுதிபடுத்திவிடக் கூடாது என்பதற்காகவே இந்த அதிரடி முடிவு எடுத்ததாகவும் கூறப்படுகிறது.