மயிலாடுதுறை அருகே பெரம்பூர் காவல் சரகத்திற்குட்பட்ட முட்டம் கிராமத்தில், கல்லூரி மாணவன், பாலிடெக்னிக் படித்து முடித்துவிட்டு வேலை தேடும் இளைஞன் ஆகிய இரண்டு பேரை சாராயம் சாராய வியாபாரிகள் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பையும், பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கொலை செய்யப்பட்ட இளைஞர்களின் உறவினர்கள், சாராய வியாபாரிகள் ராஜ்குமார், மூவேந்தன் வீடுகளுக்கு தீ வைத்ததால் பதற்றம் நிலவுகிறது.
அதனைத் தொடர்ந்து இந்த படுகொலை குறித்து பெரம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய சாராய வியாபாரிகள் 3 பேரைத் தீவிரமாகத் தேடி வந்தனர். இதனையடுத்து மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அதே சமயம் படுகொலை செய்யப்பட்ட உடலை வாங்க மறுத்து இளைஞர்களின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு பின்னர் உடலை வாங்க ஒப்புக்கொண்டனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தினார்.
இந்த நிலையில், மயிலாடுதுறையில் முன்விரோதமே காரணமாகவே இருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் மதுவிற்பனை காரணம் அல்ல எனவும் மாவட்ட காவல்துறையினர் விளக்கமளித்துள்ளனர்.வழக்கு புலன் விசாரணையில் இருப்பதால், இரட்டைக் கொலை தொடர்பாக உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்ப வேண்டாம் என காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.