சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்து வரும் ஒரு மாணவரும், மாணவியும் காதலித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று பல்கலைக்கழக வளாகத்தில் இருவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த போது, அங்கு அடையாளம் தெரியாத 2 பேர் வந்து மாணவனை தாக்கியுள்ளனர். மாணவனை அடித்து துரத்திவிட்டு, மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
மாணவன் அளித்த புகாரின் பேரில் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த கோட்டூர்புரம் போலீசார் ஒருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தவெக தலைவர் விஜய் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்கு உள்ளேயே, மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி இருக்கும் செய்தி, மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது.
மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்தவர் கைது செய்யப்பட்டிருப்பதாகக் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தாலும் அவர் மீது விரைவான சட்ட நடவடிக்கை மேற்கொண்டு உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன். மேலும் இக்கொடூரக் குற்றத்தில் வேறு எவரேனும் ஈடுபட்டிருந்தாலும் அவர்கள் மீதும் உரிய நடவடிக்கை விரைந்து எடுக்கப்பட வேண்டும்.
ஒவ்வோர் ஆண்டும் ஒதுக்கப்படும் நிர்பயா நிதியைப் பயன்படுத்தி, பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத இடங்களைக் கண்டறிந்து, அங்கு ஸ்மார்ட் கம்பங்கள் அமைத்தல், அவசர கால பட்டன்கள், சிசிடிவி கேமரா, தொலைபேசி உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்துதல், மாநகரப் பேருந்துகள் அனைத்திலும் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்தல், பொது இடங்களில் பெண்களுக்கான கழிப்பறை வசதிகள், பெண்கள் பாதுகாப்புக்கான அவசர காலத் தொலைபேசி மற்றும் கைப்பேசிச் செயலி வசதி உள்ளிட்டவற்றை ஏற்படுத்தி, கல்வி நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், பொது இடங்கள் என அனைத்து இடங்களிலும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
இவை அனைத்தையும் ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், இவை முழுமையாகச் செயல்படுகின்றனவா என்பதையும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். இவற்றைச் செய்வதில் எவ்விதச் சமரசத்திற்கும் உடன்படாமல் தகுந்த பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். எவ்விதச் சூழலிலும் பெண்கள் மனவலிமையுடன் தங்களைத் தாங்களே தற்காத்துக் கொள்வது தொடர்பாகப் போதிய சட்ட உதவி மற்றும் உளவியல் சார்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் அவசியம். இந்த விழிப்புணர்வை, பெண்களுக்கு அவர்கள் கல்வி பயிலும் காலக்கட்டத்திலேயே அரசு ஏற்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன் எனப் பதிவிட்டுள்ளார்.
Read more ; அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பலாத்காரம்.!! – அண்ணாமலை கடும் கண்டனம்