தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் திமுக கூட்டணிக்குள் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக முதலமைச்சர் முக.ஸ்டாலின் தலைமையில் நேற்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் சில முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறு சீரமைப்பை” இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒருமனதாக கடுமையாக எதிர்ப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தொகுதி மறுசீரமைப்பு 30 ஆண்டுகளுக்கு ஒத்திவைப்பதாக பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் அறிவிக்க வேண்டும். அதற்குரிய சட்டத்திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்த தேவையான அரசியல் சட்டத் திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும். இந்த பிரச்சனை தொடர்பாக, தென்மாநிலங்களில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய ‘கூட்டு நடவடிக்கைக் குழு’ அமைக்க வேண்டுமென தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில், தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் திமுக கூட்டணிக்குள் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகளை மறுசீரமைக்கவே ராகுல் காந்தி விரும்புகிறார் என்றும் அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு முன்பாக அவரிடம் பேசியிருந்தால், இதை நடத்த வேண்டிய அவசியம் திமுகவுக்கு ஏற்பட்டிருக்காது என்றும் அண்ணாமலை கூறியுள்ளார். மேலும், தொகுதி மறுசீரமைப்பால் நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டிற்கான பிரதிநிதித்துவம் குறையாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.