தமிழக பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அண்ணாமலையின் பதவி பறிக்கப்பட்டுள்ளது. அண்ணாமலை மத்திய அமைச்சராகப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதெல்லாம் இணையத்தில், அரசியல் விமர்சகர்கள் இடையே பரவும் தகவல்கள்தான். ஆனால், இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
தற்போது வரை பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினராக அண்ணாமலை நியமனம் செய்யப்பட்டுள்ளார். அண்ணாமலையுடன் வானதி சீனிவாசன், தமிழிசை உள்ளிட்டோருக்கும் தேசிய பொதுக்குழு உறுப்பினர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. சசிகலா புஷ்பா, சரத்குமார் போன்றவர்களுக்கும் இதே பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இது அதிகாரம் கொண்ட பதவி கிடையாது. ஆனால், முக்கிய முடிவுகள் எடுக்கும் கூட்டத்திற்கு இவர்கள் அனைவரும் அழைக்கப்படுவார்கள்.
இந்நிலையில்தான், அண்ணாமலை மத்திய அமைச்சர் ஆகப்போவதாகவும் தகவல்கள் வர தொடங்கி உள்ளன. அதாவது கர்நாடகா அல்லது மகாராஷ்டிராவில் இருந்து ராஜ்யசபா வழியாக இவர் எம்பி ஆகி, பின்னர் அமைச்சராகலாம் என்ற பேச்சுக்கள் அடிபடுகின்றன. தமிழ்நாட்டில் இருந்து இவர் எம்பி ஆக வாய்ப்பு இல்லை என்றும் அதற்கு அதிமுகவின் ஆதரவு தேவை என்றும் கூறப்படுகிறது. அதனால், அண்ணாமலை தமிழ்நாட்டில் இருந்து அமைச்சராக முடியாது. இதற்கிடையே, அடுத்த வாரங்களில் மத்திய அமைச்சர்கள் பெரிய அளவில் மாற்றப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.