கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் அருகே அம்புகுத்தி பள்ளத்தாக்கு மலைப்பகுதியில் உள்ள குறிச்சியார்மலை, பிணங்கோடு, அம்புகுத்திமலை, அம்பலவாயல், எடக்கல் குகைப் பகுதிகளில் இன்று நில அதிர்வு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பயங்கர அதிர்வு உணரப்பட்டதாக மக்கள் கூறியதை அடுத்து, புவியியல் ஆய்வு மைய அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு நடத்தினர். இதனைத் தொடர்ந்து, நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியில் இருந்து குடியிருப்புவாசிகள் வெளியேற மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
நில அதிர்வுப் பதிவுகளை ஆய்வு செய்து வருகிறோம். நில அதிர்வு அசைவுகள் பற்றிய எந்த அறிகுறிகளையும் காட்டவில்லை என்று மாநில அவசரகால செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே, அம்பலவாயல் பகுதியில் அரசின் கீழ் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. அம்பலவாயல் வட்டார வேளாண்மை ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் நில அதிர்வு ஏற்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து உறுதி செய்தனர்.
இந்த நில அதிர்வு அப்பகுதி மக்களை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். முன்னதாக, கடந்த ஜூன் 29ஆம் தேதி வயநாட்டில் ஏற்பட்ட கடும் நிலச்சரிவில் சிக்கி சுமார் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்நிலையில் அப்பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது அங்குள்ள மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.