நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தைத் தொடர்ந்து தென்காசி மாவட்டத்திற்கும் மார்ச் 4 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், மாணவர்கள் குஷியில் உள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பில் அய்யா வைகுண்டசாமி அவதார நாளன்று தலைமைப்பதிக்கு பெருந்திரளாக மக்கள் வருகை தருவார்கள். கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்கள் மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு மார்ச் 4ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டது.
ஆனால், தென்காசி மாவட்டத்திற்கும் அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன. அதன்படி, மார்ச் 4 ஆம் தேதி தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகள், மாநில அரசு அலுவலகங்கள், நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு தேர்வு நடைபெற்று வரும் நிலையில், அதற்கு இடையூறு ஏற்படாத வகையில், விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல்கிஷோர் உத்தரவிட்டுள்ளார். இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 15.03.2025 (சனிக்கிழமை) பணிநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.