கடந்த ஜூன் 13ஆம் தேதி காலையில் அமைச்சர் செந்தில்பாலாஜி இல்லத்தில் சோதனை நடத்த தொடங்கிய அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் விசாரணை நடத்தினர். அதைத் தொடர்ந்து அவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்த நிலையில், திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து, ஜூன் 14 அதிகாலை 3 மணிக்கு சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இதயத்திற்கு ரத்தம் கொண்டு செல்லும் 3 குழாய்களில் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, அவரது குடும்பத்தினர் விருப்பத்தின் பேரில் நீதிமன்ற உத்தரவு மூலம் காவேரி மருத்துவமனைக்கு செந்தில்பாலாஜி மாற்றப்பட்டார். அங்கு 8 நாட்கள் ஓய்வில் இருந்த அவருக்கு ஜூன் 21ஆன் தேதி அதிகாலை இதய அறுவை சிகிச்சை நடைபெற்றது. தற்போது காவேரி மருத்துவமனையில் ஓய்வில் இருந்து வருகிறார் செந்தில்பாலாஜி. இதற்கிடையே, இவரை நீதிமன்றக் காவலில் எடுத்த அமலாக்கத்துறை மேற்கொண்டு எதுவும் விசாரிக்க முடியாமல் தடுமாறி வருகிறது.
இந்நிலையில், அமைச்சர் பதவியிலிருந்து செந்தில்பாலாஜியை நீக்க வேண்டும் எதிர்க்கட்சிகள் மட்டுமல்ல ஆளுநரும் அழுத்தம் கொடுக்கத் தொடங்கினார். ஆனாலும், செந்தில்பாலாஜியை முழுமையாக கைவிட விரும்பாத ஸ்டாலின், அவரிடமிருந்த 2 துறைகளை அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் முத்துசாமிக்கு பகிர்ந்துகொடுத்துவிட்டு இலாகா இல்லாத அமைச்சராக செந்தில்பாலாஜியை தொடர வைக்கிறார்.
இதனிடையே, அதற்கும் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ள நிலையில், முதற்கட்டமாக கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் என்ற பதவியை மட்டும் பறித்திருக்கிறார். இதற்கிடையே, இது தொடர்பாக வெளியாகியுள்ள அரசாணையில், ”மாண்புமிகு அமைச்சர்கள் சிலரை சில மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்களாக நியமனம் செய்து அந்தந்த மாவட்ட வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்தவும், பொதுமக்களுக்கு சென்றடைய வேண்டிய நலத் திட்ட உதவிகளை கண்காணிக்கவும், இயற்கைச் சீற்றம், நோய்த் தொற்று மற்றும் இன்ன பிற நேரங்களில் அவசரகால பணிகளை கூடுதலாக மேற்கொள்ளவும் வருவாய் மாவட்ட வாரியாக மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் பொறுப்பு அமைச்சர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.”
மேற்படி, வருவாய் மாவட்ட வாரியான பொறுப்பு அமைச்சர்களில் கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு, திரு சு. முத்துசாமி, மாண்புமிகு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புர வளர்ச்சித் துறை அமைச்சர் அவர்களை நியமனம் செய்து உத்தரவிடப்படுகிறது. கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ள வீட்டு வசதி மற்றும் நகர்ப்புர வளர்ச்சித் துறை அமைச்சர் அவர்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் (District Monitoring Officer) மற்றும் அனைத்துத் துறைகளை சார்ந்த அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து, திட்டப் பணிகளை துரிதப்படுத்துதல், நலத்திட்ட உதவிகள் பொதுமக்களுக்கு சென்றடைவதை கண்காணித்தல் மற்றும் தேவையான ஆலோசனைகள் வழங்கவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.