உளுந்தூர்பேட்டையை அடுத்த செங்குறிச்சி மற்றும் திருமாந்துறை சுங்கச்சாவடிகளில் வாகனங்களுக்கான கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை – பாடாலூர் வரையிலான நெடுஞ்சாலையில் உள்ள செங்குறிச்சி மற்றும் திருமாந்துறையில் உள்ள சுங்கச்சாவடிகளில் வாகனங்களுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை திருச்சி டோல்வே பிரைவேட் லிமிட்டெட் அறிவித்துள்ளது. இந்த புதிய கட்டண உயர்வு செப்டம்பர் மாதம் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஏற்கனவே கார், வேன், ஜீப் உள்ளிட்ட வாகனங்களுக்கு ஒரு முறை செல்வதற்கான கட்டணம் ரூ.55ஆக இருந்த நிலையில், ரூ.65 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதே போல் பலமுறை சென்று வருவதற்கான கட்டணம் ரூ.85ஆக இருந்த நிலையில் ரூ.100 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இலகுரக வாகனங்கள் ஒரு முறை செல்வதற்கான கட்டணம் ரூ.100இல் இருந்து ரூ.115 ஆகவும், பலமுறை சென்று வருவதற்கான கட்டணம் ரூ.150இல் இருந்து ரூ.170 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும் டிரக், பஸ்களுக்கு ஒருமுறை செல்ல ரூ.200 ஆக இருந்த கட்டணம் ரூ.230ஆகவும், பலமுறை செல்வதற்கான கட்டணம் ரூ.300ல் இருந்து ரூ.345 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. பல அச்சுகள் கொண்ட வாகனங்கள் ஒரு முறை செல்வதற்கான கட்டணம் ரூ.320ல் இருந்து ரூ.370ஆகவும், பலமுறை செல்வதற்கான கட்டணம் ரூ.480ல் இருந்து ரூ.550ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே பெட்ரோல், டீசல் விலையால் வாகன ஓட்டிகள் சிரமத்தை சந்தித்து வரும் சூழலில், இந்த டோல்கேட் கட்டண உயர்வு அமலுக்கு வர உள்ளது.