கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண நிதி அறிவித்து சர்ச்சையில் சிக்கியது திமுக அரசு. கள்ளச்சாராயம் குடித்தவர்களின் குடும்பங்களுக்கு மட்டுமல்லாது, கள்ளச்சாராயம் விற்றவர்களின் சிகிச்சைக்கும் நிவாரணத் தொகை வழங்கியது. இது பெரும் பரபரப்பையும், விவாதத்தையும் ஏற்படுத்தி, ஆளும் திமுக அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்திய நிலையில், தற்போது மற்றொரு சர்ச்சையில் சிக்கியிருக்கிறது ஸ்டாலின் அரசு.
தமிழறிஞர்களுக்கு வழங்கப்படுகிற கெளரவமாக கவிஞர் வைரமுத்துவுக்கு கனவு இல்லம் கட்டித் தரப்படும் என்கிற அறிவிப்புக்கு தமிழக மக்கள் கொந்தளிக்கிறார்கள். எந்த பொது சேவையிலும் ஈடுபடாதவர் வைரமுத்து. பொது சேவையை விடுங்க.. அவரோட துறையிலாவது இளைஞர்களை வழிநடத்தியவரா என்றால் கிடையாது… போட்டி.. பொறாமை என்று ஒரு தலைமுறை இளைஞர்களை திரைத்துறைக்குள் நுழையவிடாமல் பார்த்து கொண்டவர். அவருக்கா வீடு?
ஒரு பெண் புகார் கூறினால், பழி வாங்கும் நடவடிக்கை.. களங்கப்படுத்துகிறார்கள் என்று கூறலாம். சின்மயி உட்பட 16 பேர் பாலியல் புகார் கூறியுள்ள நிலையில், தற்போது மேலும் ஒரு பாடகி, வைரமுத்து மீது பாலியல் புகார் கூறியுள்ளார். இவருக்கா தமிழக அரசு இந்த கெளரவம் வழங்கப் போகிறது என்று கொந்தளிக்கவும் செய்துள்ளார்.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு வைரமுத்து மீது ‘மீ டு’ பாலியல் புகார் அளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை நிரூபிக்கும் வகையில் வைரமுத்து சின்மயிக்கு அனுப்பிய மெயில் உட்பட அனைத்தையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டு அவர் மீது குற்றம் சாட்டினார். அத்துடன் இதே போல் வைரமுத்துவால் ஏராளமான பெண்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் பரபரப்பு தகவலை வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து சின்மயி மட்டுமல்லாமல் பலர் வைரமுத்து மீது குற்றம் சாட்டினர்.
அதன் பிறகு சினிமா துறையில் நடக்கும் பாலியல் அத்துமீறல்கள் ஒவ்வொன்றாக வெளியில் வரத் தொடங்கின. இந்நிலையில் தற்போது பிரபல பாடகி புவனா சேஷனும் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை வைத்துள்ளார். இது குறித்து அவர் ஊடகங்கள், சமூக வலைதளங்களுக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் “17 பெண்கள் வைரமுத்துவுக்கு எதிராக பாலியல் குற்றசாட்டை முன் வைத்துள்ளனர். இதில் 4 பேர் மட்டும்தான் தைரியமாக தங்களது பெயரையும் முகத்தையும் வெளி உலகத்திற்கு காட்டினர். பாலியல் வன்கொடுமை சூழ்நிலையில் இருந்து வெளியே வருவது என்பது மிகவும் கடினமான ஒன்று.
நான் தற்போது என்னுடைய கதையை கூறுவதற்கான நோக்கமே என்னை போல் பல இளம் பாடகர்களின் கனவுகள் நசுக்கப்படுகின்றன. எனக்கு நேர்ந்ததை போல பிற பெண்களுக்கு நடக்க நான் விரும்பவில்லை. சின்மயி தொடர்ந்து வைரமுத்து மீதான குற்றசாட்டுகளை முன்வைக்கும் போது அவர் பலரால் விமர்சனம் செய்யப்பட்டார். பாடகி சின்மயியின் தைரியம் என்னை வியக்க வைக்கிறது. இந்த சம்பவத்தில் பல பெண்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். ஆனால், இது குறித்தான விசாரணை என்பது நடக்கபோவதில்லை, நடத்தவும் விடமாட்டார்கள்” என ஆவேசமாக பேசியுள்ளார்.