விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரம் பகுதியை சேர்ந்த தனசேகரனின் .இளைய மகன் வினோத்குமார், இவருக்கு வயது 21 ஆகும். மதுரை திருமங்கலம் அருகே உள்ள ஒரு தனியார் இன்ஜினியரிங் கல்லூரி விடுதியில் தங்கி கம்ப்யூட்டர் சயின்ஸ் மூன்றாமாண்டு படித்து வந்தார்.
நேற்று காலை வினோத்குமார் கல்லூரிக்கு செல்லவில்லை. அவருடன் தங்கி இருந்த மாணவர் ஒருவர், மதியம் விடுதி அறைக்கு வந்தபோது வினோத்குமாரின் அறை உள்புறம் பூட்டப்பட்டு இருந்தது. கதவை தட்டியும் வினோத்குமார் திறக்காததால் சந்தேகம் அடைந்த மாணவர், கல்லூரி ஆசிரியரிடம் தகவல் தெரிவித்தார். விடுதி வார்டன், ஆசிரியர்கள் வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, மாணவர் வினோத்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து கள்ளிக்குடி போலீசார் வந்து விசாரணை நடத்தினர். இதில், மாணவர் வினோத்குமார் ஆன்லைன் விளையாட்டில் ஆர்வம் கொண்டவர் என்பதும் ரம்மி மற்றும் ஃப்ரி பயர் போன்ற விளையாட்டுகளை விளையாடி அதிகளவில் பணத்தை இழந்துள்ளார். ‘மாணவர் வினோத்குமார் ஆன்லைன் ரம்மி விளையாட பெற்றோரிடம் பணம் வாங்கியுள்ளார். அடிக்கடி பணம் வாங்கியதால் பெற்றோர் கண்டித்துள்ளனர்.
பணம் இல்லாததால் லோன் ஆப் மூலம் கடன் வாங்கி ஆன்லைன் ரம்மி விளையாடியதாக கூறப்படுகிறது. அந்த கடனை திருப்பி செலுத்த முடியாததால், வினோத்குமார் மனவிரக்தியில் இருந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு நண்பர்களுடன் வெகுநேரம் சிரித்து பேசி, விளையாடி மகிழ்ந்துள்ளார். நேற்று அதிகாலை 3 மணியளவில் அனைவரும் உறங்க சென்ற பின்னர் மற்றொரு அறைக்கு சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்திருக்கிறார்’’ என போலீசார் சார்பில் தெரிவிக்கப்படுகிறது.
தமிழகம் முழுவதும் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 37 பேர் தற்கொலை செய்து கொண்டனர். கடந்த 15 நாளில் மட்டும் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து 6 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.