ஈரோடு மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் திருவிழாவையொட்டி ஏப்ரல் 8ஆம் தேதி ஈரோடு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக தமிழகத்தில் அந்தந்த மாவட்டங்களில் கோவில் திருவிழாக்கள், கும்பாபிஷேகங்கள், சுதந்திரப் போராட்ட வீரர்களின் நினைவு தினங்கள் மற்றும் சிறப்பு தினங்களில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம் இதற்கான அதிகாரம் அந்தந்த மாவட்ட ஆட்சியருக்கு வழங்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் வரும் ஏப்ரல் 8ஆம் தேதி ஈரோடு மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் திருவிழா வெகு விமர்சியாக கொண்டாடப்பட உள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். மேலும் அந்த நேரங்களில் எந்த ஒரு அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க ஈரோடு மாவட்டம் முழுவதும் அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் வரும் ஏப்ரல் 26 ஆம் தேதி வேலை நாள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் குண்டம் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். இதில் தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா கர்நாடகாவை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் குண்டம் இறங்கி தீமிதித்து வழிபாடு நடத்துவர்.